Published : 30 Jan 2022 09:04 AM
Last Updated : 30 Jan 2022 09:04 AM
கோத்தகிரி லாங்வுட் சோலையில் அபூர்வ வகை பூஞ்சான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் 250 ஏக்கர் பரப்பில் லாங்வுட் சோலை அமைந்துள்ளது. இந்த சோலையில் 44 மர வகைகள், 32 வகையான புதர்கள், 25 கொடி வகைகள், ஒன்பது வகையான பெரணிகள், ஆர்கிட் மலர்கள் உள்ளிட்ட அரிய தாவரங்கள் உள்ளன. மேலும், இமயமலையில் இருந்து வந்து செல்லும் வுட்காக், வங்கதேசத்தில் இருந்து வரும் வாலாட்டி குருவிகள், குரோஷியாவில் இருந்து வரும் பிளேக் பேர்ட் பறவைகள் என, 90 வகையான பறவைகளின் வாழ்விடமாகவும் அமைந்துள்ளது.
குறிப்பாக, இந்த சோலையில் இரண்டு புலிகள் உள்ளதாக வனத்துறையினர் பெருமிதம் தெரிவிக்கின்றனர். பசுமைமாறாத காடான லாங்வுட் சோலையில், ஆண்டுதோறும் தண்ணீர் உற்பத்தியாகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சோலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சதுப்பு நிலங்களிலிருந்து, தாழ்வான பகுதியில் அமைந்துள்ள 25 கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தியாகிறது.
இந்நிலையில், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோலைக்காட்டில், நீல நிறமுள்ள ‘கோபால்ட் கிரஸ்டு ஃபங்கஸ்' என்ற அபூர்வ வகை பூஞ்சானை லாங்வுட் சோலை பாதுகாப்பு குழு செயலாளர் கே.ஜே.ராஜு கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, "கோத்தகிரியின் மையத்தில் அமைந்துள்ள லாங்வுட் சோலை, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. சுமார் இருநூற்று ஐம்பது ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த காடு, ‘மாவுண்டேன் சோலா’ என்ற காடு வகையை சேர்ந்தது. அபூர்வமான தாவரம், உயிரினங்களை உள்ளடக்கிய பல்லுயிர்ச்சூழல் மண்டலமாக அறியப்படுகிறது. இங்குவழக்கமான ஆய்வையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
தற்போது, முதன் முறையாக நீல நிறமுள்ள ‘கோபால்ட் கிரஸ்டு ஃபங்கஸ்'எனப்படும் அபூர்வ வகை பூஞ்சானைகண்டுபிடித்துள்ளேன். இந்த பூஞ்சான், தாவரப் பொருட்களை, அவற்றின் அடிப்படைக் கூறுகளாக (மாவுச்சத்து, எளிய சர்க்கரைகள், புரதங்கள், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசரால் வகை கொழுப்பு அமிலங்கள்) திறம்பட உடைக்கிறது.
உலகம் முழுவதும் வெப்பம் முதல் மிதமான சூழலில் இவை காணப்படுகின்றன. தென்கிழக்கு அமெரிக்கா, துருக்கி, கேனரி தீவுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி உட்பட பல புவியியல் பகுதிகளிலும் காணப்படுகிறது. ஈரப்பதமான இலையுதிர் காடுகளில், பொதுவாக மரக்கட்டைகளின் அடிப்பகுதியில் அல்லது கிளைகளின் கீழ் பக்கங்களில் காணப்படும்" என்றார்.
கோத்தகிரி வனச்சரகர் சிவா கூறும் போது, "ஓய்வுபெற்ற ஆசிரியரும், லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு செயலாளருமான கே.கே.ராஜு கண்டுபிடித்த இந்த பூஞ்சான் குறித்து, உரிய பதிவு செய்வதுடன் மேலும் பல்வேறு தகவல்கள் பெறுவதற்கு, வன உயிரின ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT