Published : 29 Jan 2022 09:04 PM
Last Updated : 29 Jan 2022 09:04 PM
சென்னை: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம் சிறப்பிடம் பெற்று, மருத்துவம் படிப்பில் சேர்ந்த இரு மாணவர்களை தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வாழ்த்தினார்.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நீட்) கட்டாயமாக்கப்பட்டுவிட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய தமிழக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றியது. இதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வருகிறது. இந்த ஆண்டு நடந்து வரும் கலந்தாய்வில் கலந்துகொண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்துவருகிறார்கள்.
இந்த நிலையில், அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: இன்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.பிரகாஷ்ராஜ், அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, நீட் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றவர் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவப் படிப்பிற்கான இடம்பெற்றுள்ளார். இதேபோல், சென்னையைச் சேர்ந்த மாணவி பிரவீணா அரசுப் பள்ளியில் கல்வி பயின்று, நீட் தேர்வில் சென்னை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவப் படிப்பிற்கான இடம்பெற்றுள்ளார்.
இவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன், இந்தச் சட்டத்தை கொண்டுவந்த தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி மாணவர்கள் இருவரையும் வாழ்த்தினார். இந்த நிகழ்வின் போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT