Published : 29 Jan 2022 07:24 PM
Last Updated : 29 Jan 2022 07:24 PM
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர, திமுகவினர் போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் பட்டியலை வரும் ஜன.31-ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கழகத் தலைவர் தலைமையில் 27.1.2022 அன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர், பொறுப்பாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் வாய்ப்புள்ள இடங்களை அவர்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
கழகத் தலைவர் அறிவுரைப்படி, கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமுகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர, கழகம் போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை 31.1.2022 ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திட மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT