Published : 29 Jan 2022 05:16 PM
Last Updated : 29 Jan 2022 05:16 PM

'அதிமுகவுடன் இடப் பங்கீடு... பின்னடைவு, சிக்கல் எதுவும் கிடையாது' - 3 மணி நேர பேச்சுக்குப் பின் அண்ணாமலை தகவல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இட பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 4-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறோம், இன்னும் பேச்சுவார்த்தையை தொடருவோம். அனைத்தும் முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் விரிவாக பேசுகிறோம். இதில் பின்னடைவு, சிக்கல் போன்றவை எதுவும் கிடையாது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது சிக்கலான வேலை.

கிட்டத்தட்ட 12,838 வார்டுகளில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி என அனைத்து இடங்களுக்குமான தேர்தல் நடைபெறுகிறது. அதனால் இதெல்லாம் பேசிதான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். குறிப்பாக அதிமுக தலைமையிலான கூட்டணி, முக்கியமான எதிர்கட்சியாக இருக்கும் கூட்டணி, பலமான எதிர்கட்சியாக நின்று, மக்கள் மன்றத்தில் திமுக மீது நிறைய பிரச்சினைகள் உள்ளது, அதிருப்தி உள்ளது இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்தத் தேர்தல் பிரச்சாரமே வேறு வடிவில் நடைபெறப் போகிறது. நூறு பேர்தான் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், வேட்பாளருடன் இரண்டு பேர்தான் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எல்லாவற்றையும் பார்த்துதான், வேட்பாளர்கள் எப்படி நிறுத்த வேண்டும், மாவட்டத் தலைவர்களுடன் கலந்து பேச வேண்டும். நாங்கள் ஒரு கருத்து சொல்லுவோம், பெரிய கட்சியாக இருக்கிற அதிமுக ஒரு கருத்து வைத்திருப்பார்கள். மாவட்டத் தலைவர்களுடன் அவர்கள் பேசித்தான் எதுவும் சொல்ல முடியும். எனவே, பேச்சுவார்த்தை நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில் எத்தனை சதவீத இடங்கள், எதிர்பார்ப்புகள் என்ற கேள்வி இல்லை. எங்களை பொறுத்தவரை, சில கருத்துகளை கூறுகிறோம், எந்தப் பகுதி எப்படி உள்ளது என்று. பெரிய கட்சி அதிமுக, குறிப்பாக நகர்ப்புற தேர்தலில் வந்து நிறைய இடங்களில் பாஜக வலுவாக உள்ளது. இதற்குமுன் 2011-ல் தனியாக நின்ற போதுகூட வெற்றி பெற்றிருக்கிறோம். கூட்டணி சார்பாக போட்டியிட்டும் வென்றுள்ளோம். பேச்சுவார்த்தை முடிந்தபின் விரிவாக எத்தனை இடங்களில் போட்டி என்பது குறித்து அறிவிக்கப்படும்.

முன்னதாக, சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி மற்றும் இட பங்கீடு குறித்து விவாதிக்கப்படுகிறது. அதிகப்படியான வார்டுகளை கேட்டுப் பெறவும், பாஜக பலமாக உள்ள கோவை மற்றும் கன்னியாகுமரியில் அதிகமான இடங்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகப்படியான வார்டுகளை பெற்றால்தான், தலைவர், துணை தலைவர் பதவிகளை கைப்பற்ற முடியும் என்பதால், அதிகமான வார்டுகளை கேட்டுப் பெற மாவட்ட தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகக்கூடிய சூழலில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக பாஜக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x