Last Updated : 29 Jan, 2022 04:29 PM

2  

Published : 29 Jan 2022 04:29 PM
Last Updated : 29 Jan 2022 04:29 PM

புதுக்கோட்டையில் 31 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட்: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிஇஓ நேரில் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி இன்று (ஜன.29) நேரில் சென்று பாராட்டினார்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நா.தீபிகா, ச.வாலண்டினா, எம்.கனிகா, ஜெ.சுவாதி, ஆர்.யமுனா, ப.நிஷாலினி ஆகிய ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. இதேபோன்று, வடகாடு பி.பவித்ரன், எல்.என் புரம் கு.புவியரசி, மேற்பனைக்காடு ஷம்ஷியா அப்ரின், சிலட்டூர் ஐ.சிவா, அரையப்பட்டி கார்த்திக்ராஜா, வைத்தியநாதன், வயலோகம் என்.கீர்த்திகா, சிதம்பரவிடுதி நாகராஜன், கல்லாக்கோட்டை ஆர்.பவானி, எஸ்.ஆர்த்தி, கொடும்பாளூர் நந்தினி, கட்டுமாவடி கார்த்திகா, ரெகுநாதபுரம் எம்.முத்தமிழ்தேவி, புதுக்கோட்டை அரசு முன்மாதிரி பள்ளி கே.கமலி, மழையூர் முகமதலிஜின்னா, செவல்பட்டி போதும்பொண்ணு, அழகாபுரி ஐஸ்வர்யா, மணமேல்குடி கலைவாணி, சுப்பிரமணியபுரம் திலகா ஆகிய 25 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.

இதேபோன்று, கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி டி.நிஷா, புதுக்கோட்டை ராணியார் பள்ளி மீனா, சிலட்டூர் ராஜேஸ்வரி, கட்டுமாவடி ஹேமலதா, கல்லாக்கோட்டை காளிதாஸ், ரெகுநாதபுரம் ஸ்ரீநிதி ஆகிய 6 பேர் அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஆண்டில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 31 பேர் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

சிஇஓ பாராட்டு: இதையடுத்து, 7 மாணவிகளுக்கு மருத்துவ சீட் பெற்றுள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவிகளை நேரில் சென்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி இன்று பாராட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 25 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்டும், 6 பேருக்கு பிடிஎஸ் சீட்டும் கிடைத்துள்ளது. மாவட்டத்தில் ஒரே ஆண்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ சீட் கிடைத்திருப்பது இதுவே முதல்முறையாகும். 7 பேர் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். நான் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நிகழாண்டு ஆலங்குடி வட்டாரத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்துள்ளது. இதேபோன்று, மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றும் வகையில் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்படும். இதுதவிர, ஆட்சியரின் ஆலோசனையுடன் மாவட்டத்தில் முன்னோடி நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த சிலட்டூர் பள்ளி மாணவர் ஐ.சிவாவா, அவரது வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினார். இதனால், மாணவரின் பெற்றோர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x