Published : 29 Jan 2022 04:40 PM
Last Updated : 29 Jan 2022 04:40 PM
புதுச்சேரி : "புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கல் விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன?" என்று எதிர்கட்சித் தலைவர் சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் ஆளும் ஜனநாயக விரோத பாஜக அரசு, அரசு நிறுவனங்கள் அனைத்தையும் படிப்படியாக தனியார் மயமாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க முயற்சித்து வருகிறது.
தனியார் மயமானால் சேவை நோக்கு என்பது லாப நோக்காக மாறிவிடும். ஏற்கெனவே டெல்லி, ஒரிசா போன்ற மாநிலங்களில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டு அம்மாநில மக்களும், அரசுகளும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மின்சாரம் என்பது பொதுப்பட்டியலில் வருகிறது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுத்துவிட முடியாது. அதனால் தற்போதைய மத்திய அரசின் மின்துறை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மாநில அரசு மவுனமாக இருப்பதால் சம்மதம் தெரிவித்து விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையும் அச்சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது வழக்கமாக அதிக யூனிட்களுக்குத்தான் கட்டணம் உயர்த்தப்படும், குறைந்த யூனிட்களுக்கு குறைந்த அளவு அல்லது கட்டண உயர்வே இருக்காது. ஆனால் இந்த முறை 200 யூனிட்களுக்கு வரையே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல் தனியார் தொழிற்சாலைகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினால்கூட தொழிலாளர் துறை சமரச அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வரமாட்டார்கள். ஆனால், மின்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்தவுடன் தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரி இவ்விஷயத்தில் சமூக தீர்வை கொண்டுவர 31ம் தேதி சமரச நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.
எனவே, மின்துறை தனியார் மயமாக்கும் விஷயத்தில் அரசின் கொள்கை முடிவு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மின்துறை தனியார் மயமாவதால் புதுச்சேரி மக்களுக்கும், மாநில அரசுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன உள்ளிட்டவைகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மின்துறை தனியார் மயமாக்கம் என்பது புதுச்சேரியின் சுய கவுரவம், தன்மானத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை புதுச்சேரியை ஆளும் அரசு உணர வேண்டும். புதுச்சேரி அரசு மின்துறை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அமைதியாகவே எடுத்து சாதித்துவிடலாம் என்று நினைத்து விடக்கூடாது.
ஏனென்றால் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்களும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். எனவே மின்துறை தனியார் மயமாக்கப்படாது என்று வெளிப்படையாக முதல்வர் ரங்கசாமி அறிவிக்க வேண்டும்" என்று சிவா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT