Published : 29 Jan 2022 04:08 PM
Last Updated : 29 Jan 2022 04:08 PM
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இதை கைவிடக் கோரி புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கார்ப்பரேஷன், தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவை ஏற்படுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகள், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி அரசு மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி சேதுசெல்வம், தயாளன், சந்திரசேகரன், சிஐடியு முருகன், சீனுவாசன், பிரபுராஜ், ஐஎன்டியுசி ஞானசேகரன், சொக்கலிங்கம், ஏஐசிசிடியு பாலசுப்ரமணி, மோதிலால், அரசு ஊழியர் சம்மேளனம் பரேமதாசன், ராதாகிருஷ்ணன், எல்எல்எப் செந்தில், தங்க. கதிர்வேல், எஎல்எப் கபிரியேல் ஆகியோர் கலந்துகொண்டு மின்துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ''கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்தீர்மானத்தை புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு தன்னிச்சையாக புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை எடுத்து வருவது கண்டனத்துக்குரியது. தனியார் மயமாக்கப்பட்ட டெல்லி போன்ற இடங்களில் 1 யூனிட்டுக்கு ரூ.8 வசூல் செய்யப்படுகிறது. அப்படியென்றால் தனியார் மயமானால் மின்கட்டணம் என்னவாகும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
மேலும் வணிகர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மின்கட்டணம் என்பது மூன்று மடங்கு உயர வாய்ப்புள்ளது. புதுச்சேரி அரசு மின்துறையில் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகும். மின்துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு மின்துறை போராட்டக்குழுவினர் பிப்.1 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக நாம் மாற்றினால்தான் நம்முடைய வரிப்பணத்தில் உருவான அரசுக்கு சொந்தமான சொத்தை காப்பாற்ற முடியும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட முடியும். ஆகவே மின்துறை தனியார் மயமாக்க நடவடிக்கையை கைவிட வேண்டும்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT