Published : 29 Jan 2022 03:18 PM
Last Updated : 29 Jan 2022 03:18 PM

சென்னையில் பறக்கும் படையினரால் ரூ.1.39 லட்சம் பறிமுதல்: ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னையில் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.39 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "அனைத்து அரசியல் கட்சிகளும், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், பேனர்களை அகற்ற வேண்டும். ஏற்கெனவே சென்னை மாநகராட்சியில் சுவரொட்டிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. சுவரொட்டிகள் ஒட்டியிருந்தால், அவற்றை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது, மாநகராட்சி சார்பிலும் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று வரை அரசுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 3,688, தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 2,528 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. அதிகாரிகளுக்கு முழுமையாக அகற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேட்பாளர்கள், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டம் நடத்துவது என்றால், காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்குள் தான் நடத்த வேண்டும்.

தமிழக அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வரும் ஜன.31-ம் தேதி வரை சைக்கிள் பேரணி, ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை. அதேபோல் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களுக்கும் அனுமதியில்லை. அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிகபட்சமாக நூறு பேர் அனுமதிக்கப்பட வேண்டும். சென்னையில் நேற்று பறக்கும் படையினரால், ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை 27,812 அதிகாரிகளுக்கு 24 மையங்களில் தேர்தல் குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x