Published : 29 Jan 2022 08:51 AM
Last Updated : 29 Jan 2022 08:51 AM
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பாப்பான்குளம், பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையம் என சுற்றிக் கொண்டிருந்த சிறுத்தை, இறுதியாக திருப்பூர் மாநகர் அம்மாபாளையம் கஸ்தூரிபாய் வீதியில் நேற்று முன்தினம் பிடிபட்டது. கடந்த24-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி சிறுத்தை பிடிபடும் வரை, பலர்சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர்.
பாப்பான்குளத்தில் தோட்டத்து உரிமையாளர் வரதராஜன் (63), அங்கு பணிபுரிந்த விவசாய கூலித் தொழிலாளி மாறன் (66), வனத்துறை ஊழியர் வீரமணிகண்டன் ஆகியோரை தாக்கியது. 26-ம் தேதி பொங்குபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால், பொங்குபாளையம், ஈட்டிவீரம்பாளையம், பரமசிவம்பாளையம், அய்யம்பாளையம், மங்கலம் உட்பட 20 கிராமங்களில் வனத்துறை ஊழியர்கள் 80 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு தன்னார்வ அமைப்புகளும் உதவின. 27-ம் தேதி சிறுத்தை பிடிபடும் முன் அங்கு பணிபுரிந்த தோட்டத்து ஊழியர் ராஜேந்திரன், வனத்துறை ஊழியர் பிரேம், வனச்சரகர்கள் சிவக்குமார், தனபால் ஆகியோரை தாக்கியது. இறுதியாக, வேட்டைத்தடுப்பு காவலரும், மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவருமான திருமூர்த்தி என்பவரையும் தாக்கியது. பலத்தகாயங்களுடன், அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதைத்தொடர்ந்து, சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்படுவதற்கு முன்பாக ஆனந்தகுமார் என்பவரையும் தாக்கியது.
சிறுத்தையை பிடிக்க வனத் துறை ஊழியர்கள் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். போதிய கவச உடைகள் இல்லாத நிலையில், சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் இருசக்கர வாகன தலைக் கவசத்தை (ஹெல்மெட்) அணிந்திருந்தார். 10 அடி சுவரில்சிறுத்தை தாவி ஆனந்தகுமாரை தாக்கியது. அப்போது, சிறுத்தையின் கால் இடறாமல் மேலே ஏறியிருந்தால், நிச்சயம் அவரை தாக்கிவிட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்திருக்கும் என்கின்றனர் வனத்துறை ஊழியர்கள்.
இதுதொடர்பாக சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, "சிறுத்தையை பிடிக்கும் பணியில் வேட்டைத்தடுப்பு காவலர்கள், தோட்டத்து ஊழியர்கள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படும். ஆனால், அரசு சார்பில் எந்தவித நிவாரண உதவியும் வழங்கப்படுவதில்லை என்பது காலம்காலமாக தொடர்கிறது.
இதுபோன்ற நேரங்களில் அரசு சார்பில் போதிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும், குறைந்த வருவாயில் பணிபுரிவது வேட்டைத்தடுப்பு காவலர்கள்தான். அவர்கள்தான் களத்தில் உயிரை பணயம் வைத்து முன் நிற்பவர்கள். இதில் பெரும்பாலானவர்கள் மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களாக அல்லது மலைவாழ் கிராமங்களின் அருகே வசிப்பவர்களாக இருப்பர். இவர்களின் மாத ஊதியம் ரூ.12 ஆயிரத்து 500 தான். போதிய வருவாயின்றியும், அரசின் உதவிகள் இன்றியும் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.
சிறுத்தை உட்பட விலங்குகள் தாக்கும்போது, அவர்களின் உடல் நிலை மோசமடைந்துவிடும். எப்படியும் இரண்டு மாதங்களுக்கு வழக்கமான பணிகளை செய்ய முடியாது. எனவே, அரசு சார்பில் நிவாரண உதவி வழங்க வேண்டும். நவீன கவச உடைகள் இல்லாததால், சிறுத்தையின் நகம், பல் உடலில் நன்கு பதிந்துவிடுவதால் சிரமத்தை சந்திக்கின்றனர். பிளாஸ்டிக் தடுப்புகளும் போதிய அளவில் இல்லை.
சிறுத்தை தாக்கிய தோட்டத்து ஊழியர் ராஜேந்திரன், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 32 தையல் போடப்பட்டுள்ளது. அவரால் 2 மாதங்களுக்கு வழக்கமான பணிகளை செய்ய முடியாது. இதனால், அவருக்கு ஊதியப் பிரச்சினை ஏற்படும். திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில், போதிய கவச உடைகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT