Published : 24 Apr 2016 09:43 AM
Last Updated : 24 Apr 2016 09:43 AM

மாமல்லபுரம் அருகே சாலை விரிவாக்கத்துக்காக சிதைக்கப்படும் பெருந்தச்சர்களின் கல்வெட்டுகள்: உடனடியாக தடுத்து நிறுத்த கோரிக்கை

மாமல்லபுரம் அருகே, நான்கு வழிச்சாலை விரிவாக்கத்துக்காக சிற்பிகள் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் அழிக்கப்படுகின்றன. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சிற்பங்களும் கோயில்களும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன. இந்த கோயில்களையும் சிற்பங்களையும் உருவாக்கிய சிற்பிகள் மற்றும் ஸ்தபதிகளின் பெயர் கொண்ட கல்வெட்டுகள் ஆங்காங்கே வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் விரிவாக்க பணிகளால் பல இடங்களில் இந்தப் பதிவுகள் அதன் முக்கியத்துவம் அறியாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் சிற்ப நகரமாக இருந்த மாமல்லபுரம் இப்போது சுற்றுலா வளத்தின் சொர்க்கமாக உள்ளது. இதன் அருகே உள்ள பூஞ்சேரியில் முற்காலத்தில் சிற்பிகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இவ்விடத்தில் நெடுஞ்சாலையை ஒட்டியே நொண்டி வீரன் குதிரை தொட்டி என்ற கல்பாறையும் அதனையொட்டி இன்னும் சில பாறைகளும் உள்ளன. இந்தப் பாறைகளில், 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கேவாத பெருந்தச்சன், குணமல்லன், பய்யழிப்பான், சாதமுக்கியன், கலியாணி, திருவொற்றியூர் ஆபாஜன், கொல்லன் ஸேமகன் ஆகிய ஏழு சிற்பிகளின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள் உள்ளன. சிற்ப மரபு குறித்து அறிந்து கொள்ளும் இந்த அரிய பொக்கிஷங்கள் உள்ள பாறைகளை தற்போது நான்கு வழிச்சாலை விரிவாக்கத்துக்காக மண்ணைப் போட்டு மூடி வருகிறார்கள்.

இதுகுறித்து கவலை தெரிவித்த குடவாயில் பாலசுப்ரமணியன் மற்றும் அவரோடு ஆய்வு மேற்கொண்ட கவுதமன் ஆகியோர், கூறும்போது “சிற்பிகளை வைத்துத்தான் சிற்ப மரபுகளை அறிகிறோம். திறமையால் உயர்ந்த சிற்பிகளுக்குத்தான் பெருந்தச்சன் என்ற பட்டத்தை மன்னர்கள் வழங்கினார்கள். அப்படி மன்னர்களால் அங்கீகரிக்கப்பட்ட சிற்பிகளின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள்தான் பூஞ்சேரியில் உள்ளன. இதுபற்றி அரசுக்கோ, தொல்லியல் துறைக்கோ, மக்களுக்கோ சரிதான புரிதல் இல்லாததால், ஏற்கெனவே சாலை விரிவாக்கப் பணிகளில் மூன்று கல்வெட்டுகளை மூடிவிட்டார்கள்.

எஞ்சி இருக்கும் நான்கு கல்வெட்டுகளையாவது காப்பாற்ற வேண்டும். கும்ப கோணம் அருகே மானம்பாடி கோயில், விருத்தாசலம் அருகே பனையவரம் கோயில் ஆகியவை சாலை விரிவாக்கத்தின்போது பாதிப்புக்கு உள்ளாக இருந்தது. நாங்கள் தலையிட்டு கோரிக்கை வைத்ததும், கோயில்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டார்கள். அது போல, இந்த சாலையையும் எதிர்த் திசையில் பத்து அடி தூரம் விலகிச் செல்லுமாறு அமைத்தால் அரிய கல்வெட்டுகள் அழியாமல் காக்கப்படும். விரிவாக்கப் பணிகள் வேகமாக நடந்து வருவதால் அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கல்வெட்டுகளை அழிவிலிருந்து காப்பதுடன் கம்பிவேலி அமைத்து அவைகளை காக்கவும் வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x