Published : 29 Jan 2022 08:27 AM
Last Updated : 29 Jan 2022 08:27 AM

ஜேசிபி கொண்டு லாரிகள் மூலம் இரவு பகலாக மதுரை வைகை ஆற்றில் எஞ்சியிருக்கும் மண்ணும் கபளீகரம்: அதிகாரிகள் ஆதரவுடன் ஒப்பந்ததாரர்கள் அத்துமீறல்

ஆற்றின் நடுவே ஜேசிபி மூலம் மண் அள்ளப்படுகிறது.

மதுரை

மதுரை ஓபுளா படித்துறை பாலம் கட்டுமானப்பணிக்காக ஆற்றில் இரவு, பகலாக ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் மண் அள்ளப்படுகிறது. இதனால் ஆற்றில் ஏற்படும் பள்ளங்களால் நீரோட்டம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மதுரை வைகை ஆற்றில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்து வதாகக் கூறி ஆற்றை சுருக்கி விட்டனர். இந்நிலையில் தற்போது ஓபுளா படித்துறை ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தை இடித்துவிட்டு பாலம் கட்டப் படுகிறது.

பணி நடக்கும் பகுதிகளில் ஏற்படும் பள்ளங்களை நிரப்பு வதற்காக வைகை ஆற்றுக் குள்ளேயே ஜேசிபி இயந் திரங்களைக் கொண்டு பெரிய பள்ளங்களைத் தோண்டி மண் அள்ளப்படுகிறது.

ஏற்கெனவே ஆற்று மணல் முற்றிலும் கொள்ளைபோன நிலையில், எஞ்சியிருக்கும் மண்ணையும் அள்ளுவதால் ஆற் றின் வளம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மண் அள்ளப்படும் இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன.

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜன் கூறியதாவது:

மதுரை ஓபுளா படித்துறை பாலம் கட்டுமானப் பணியில் பள்ளங்களை நிரப்புவதற்காக ஷா தியேட்டர் எதிரில் உள்ள வைகை ஆற்றில் மிகப்பெரிய அளவில் பள்ளம் தோண்டி மண் அள்ளப்படுகிறது. இரவு, பகலாக லாரிகளைப் பயன்படுத்தி மண் வளம் சூறையாடப்படுகிறது. மண் அள்ளப்படும் இடங்களை மூடாமல் சென்றால் நிரந்தரமாக அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு ஆற்றின் நீரோட்டம் தடைபடும்.

இது தொடர்பாக மதுரை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உடனே தலையிட்டு வைகை ஆற்றில் மண் அள்ளுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினார்.

மாநகராட்சி உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, ஆற்றில் அள்ளப்படும் மண், உயர்மட்டப் பாலப் பணியில் மழை பெய்ததால் ஏற்பட்ட பள்ளத்தை நிரப்புவதற்குக் கொண்டு செல்லப்படுகிறது. தனியார் மண் அள்ளவில்லை. மண் அள்ளப்படும் இடங்களில் ஏற்பட்ட பள்ளங்கள் பாலப்பணி முடிந்த பின்னர் சீரமைக்கப்படும். மண் அள்ளுவதால் ஆற்றின் வளம் பாதிக்காது. மாறாக இது ஒரு வகையில் ஆற்றைத் தூர்வாரும் பணிதான் என்று கூறினர்.

அரசுப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடும்போது ஆற்று மணல், மண் உள்ளிட்ட அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களுக்கும் சேர்த்துதான் திட்டத் தொகை கணக்கிடப்படுகிறது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் அரசிடம் பெறும் பணத்தைச் செலவு செய்யாமலேயே அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. ஆற்றில் மண் அள்ளவே கூடாது என்ற விதியிருக்கும்போது அந்தத் தவறை தனியார் செய்தால் என்ன? மாநகராட்சி செய்தால் என்ன? தவறு தவறுதானே என்று மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x