Published : 06 Apr 2016 10:15 AM
Last Updated : 06 Apr 2016 10:15 AM

தேர்தல் திருவிழாவுக்குத் தயாராகும் திருவாடானை: கரை சேருவாரா கருணாஸ்?

காங்கிரஸ், தமாகா வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றிவாகை சூடிவந்த திருவாடானை தொகுதி, கடந்த முறை திமுக வசமானது. தொகுதி சீரமைப்பில் தனது கடலாடி தொகுதி காலாவதி ஆகிப்போனதால் திருவாடானை தொகுதியில் போட்டி யிட்டார் திமுக-வின் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன். அதிமுக கூட்டணியில் இங்கு தேமுதிக வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் போட்டியிட்டார். இறக்குமதி வேட்பாளர் என்றபோதும் 927 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தங்கவேலன் வாகை சூடினார்.

இந்தமுறையும் இங்கே போட்டியிடுவதற்காக வீடு பிடித்து பால்காய்ச்சிவிட்டு காத்திருக்கிறார் தங்கவேலன். இவருக்கு மாற்றாக முன்னாள் ஒன்றியச் செயலாளர் நல்ல சேதுபதியின் பெயரையும் தனது பரிசீலனையில் வைத்திருக்கிறது திமுக தலைமை. இதுவரை ராமநாதபுரம் அல்லது திருவாடானை தங்களுக்கு வேண்டும் என்று கேட்டு வந்த காங்கிரஸ், கருணாஸ் என்றதும் திருவாடானையை உடும்புப் பிடியாக பிடிக்கிறது. திருநாவுக்கரசரின் ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் குட்லக் ராஜேந்திரன் தனது மனைவி மல்லிகாவுக்காக திருவாடானைக்கு மல்லுக்கட்டுகிறார்.

அதிமுக-வை பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகனும் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியக் குழு தலைவருமான ஆனந்த், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆனிமுத்து இருவரும் தான் வேட்பாளர் பந்தயத்தில் முன்னணியில் இருந்தார்கள். இதில் ஆனிமுத்து ஏற்கெனவே 2011-ல் இதே தொகுதியில் தோற்றவர். இருவரில் யாருக்குக் கொடுத்தாலும் ஒருவரை ஒருவர் கவிழ்த்துவிடுவார்கள் என்று உளவுத்துறை அறிக்கை அனுப்பியதாலேயே தொகுதி கருணாஸுக்கு ஒதுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

தேவர் குருபூஜைக்கு பசும்பொன்னுக்கு வரும்போது திருவாடானைக்கும் வந்து அங்குள்ள தேவர் சிலைக்கும் மாலை அணிவிப்பதை வழக்கமாக வைத் திருக்கிறார் கருணாஸ். தொகுதிக்கும் இவருக்குமான தொடர்பு இவ்வளவுதான். முதுகுளத்தூர், திருச்சுழி, திருவாடானை தொகுதிகளை கேட்டிருந்தவருக்கு திரு வாடானையை வாங்கித் தந்ததில் ஜே.கே.ரித்தீஷின் பங்கும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தனது பரம எதிரியான தாத்தா தங்கவேலனை வீழ்த்தவே ரித்தீஷ் கருணாஸை கையில் எடுத்திருக்கக் கூடும்.

முக்குலத்தோரில் மறவர்களின் செல்வாக்கு ஓங்கி இருக்கும் இத்தொகுதியில் கருணாஸின் அகமுடையார் சமூகத்தினர் சிறுபான்மையினராகவே உள்ளனர். எனினும், கருணாஸின் வரவை ஆதரிக்கும் அதிமுக தொண்டர்கள், ’’வ.து.நடராஜன் தரப்பும் ஆனிமுத்து தரப்பும் இணைந்து செயல்பட்டால் இரண்டாவது முறையாக மீண்டும் இங்கே இரட்டை இலை துளிர்க்கும்’’ என்கிறார்கள். ’’திருவாடானையில் வெற்றிபெறுபவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமருவார்கள். இது கடந்த 35 ஆண்டு கால அரசியல் சென்டிமென்ட்’’ என்றும் சிலர் சொல்கிறார்கள்.

கருணாஸை கைபிடித்து அழைத்து வந்திருக்கும் ரித்தீஷால் தொகுதிக்குள் பண மழை பொழியும் என எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்கள் மக்கள். தங்கவேலன் இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டால் மறவர், அகமுடையர் அஸ்திரத்தை எடுக்கவும் சிலர் தயராகிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனையையும் தாண்டித் தான் கருணாஸ் கரை சேரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x