Published : 28 Jan 2022 05:25 PM
Last Updated : 28 Jan 2022 05:25 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 107-ஆக உயர்வு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 107-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளான கலந்தாய்வு சென்னை ஓமாந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கலந்தாய்வின் இரண்டாவது நாளான இன்று 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முதல் 10 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் பல் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் 107-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட 1,570 மருத்துவ இடங்கள் இந்த ஆண்டு கூடுதலாக கிடைத்துள்ளது. தவறுதலாக பொதுப்பிரிவில் விண்ணப்பித்த தகுதிவாய்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 152 பேர் மீண்டும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டனர். பிப்ரவரி 11 அல்லது 12-ஆம் தேதியுடன் முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு நிறைவடையும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. கடந்த கல்வியாண்டைப் பொருத்தவரை இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 433 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்தன. இந்தநிலையில், நடப்பாண்டு இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் 2,135 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் கலந்தாய்வின் முதல் நாளான இன்று, 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 324 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 113 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 84 பேருக்கும் பி.டி.எஸ்., இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x