Published : 28 Jan 2022 01:59 PM
Last Updated : 28 Jan 2022 01:59 PM

கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான வழக்கு: சமரச மையம் விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

சென்னை: சென்னை - புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ் டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், சமரச மையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 2016-ஆம் ஆண்டில் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தரமற்றவையாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்ததால், ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், தரமற்ற வகையில் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு எதிராக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், ஏன் தடை பட்டியலில் சேர்க்கக் கூடாது என விளக்கம் அளிக்க அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து பி.எஸ்.டி. நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பி.எஸ்.டி.நிறுவனத்தின் தரப்பில், சம்பந்தப்பட்ட கட்டடத்தில் 93 சதவீத சரிசெய்யும் பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறுவன தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதி, நிறுவனத்தை தடைப் பட்டியலில் சேர்த்து பணிகள் மேற்கொள்ள தடை விதித்தால், அது சீரமைப்புப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்து விடும் எனக் கூறி, அந்த நிறுவனத்திற்கு எதிரான நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவில் ஏற்கெனவே அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், பிரச்சினைகளை Aribitration center என்று அழைக்கப்படும சமரச மையத்தில் மூலம் தீர்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும், சமரச மையம் விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி, அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். இந்த வழக்கு மீதான விசாரணையை பிப்ரவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x