Published : 28 Jan 2022 12:58 PM
Last Updated : 28 Jan 2022 12:58 PM
சென்னை: "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இரண்டு நாட்களில் மாவட்ட அளவிலேயே வெளியிடப்படும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிட விருப்பம் தெரிவித்து கேட்கப்படுகிறதோ, அந்த இடங்களை எல்லாம் பரிசீலிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு, மூன்று தினங்களில் மாவட்ட அளவிலேயே காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். பேச்சுவார்த்தைக்கு செல்லும் மாவட்ட தலைவர்கள், திமுக மாவட்ட கழக செயலாளர்களோடு, நாங்கள் பேசியிருக்கிற குழுக்களின் கருத்தை, நாங்கள் அறிவித்திருக்கிற குழுக்களின் கருத்தைக் கேட்டு, வெற்றி வாய்ப்புள்ள இடங்களில், தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்திருக்கிறது. சில மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இடதுசாரிகள், விசிக, மதிமுக, கொமதேக என பல கட்சிகளுடன் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. எல்லாம் மகிழ்ச்சியாகவே சென்று கொண்டிருக்கிறது" என்றார்.
மேலும் அவர் கூறியது: "குடியரசு தின அணிவகுப்பில், அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படாதது குறித்து முதல்வருடன் எங்களது கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஒரு மாநிலத்துக்கு வழங்க வேண்டிய உரிமையை, மரியாதையை பாஜக அரசு வழங்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
கடந்த 70 ஆண்டு காலமாக, இந்தியாவினுடைய ஒற்றுமை மாநிலங்கள் பங்கெடுப்பதன் மூலமாகத்தான் சுதந்திர தின, குடியரசு தின நிகழ்ச்சிகளில் அந்த அலங்கார ஊர்திகள் பங்கெடுத்தன. ஆனால் இன்றைக்கு பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் இருந்து மட்டுமே அலங்கார ஊர்திகள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் இருந்து அனுமதிக்கப்படவில்லை. இதை ஒரு மிகப்பெரிய பின்னடைவாக நாங்கள் கருதுகிறோம். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தன்னுடைய கருத்தை மத்திய அரசுக்கு கடுமையாக தெரிவித்திருக்கிறார். அதற்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்தோம். மத்திய அரசிடம் மேலும் மேலும் நம்முடைய உரிமைகளை கேட்டுப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
காங்கிரஸ் ஆட்சியின்போது எந்த ஊர்தியையும் அனுமதிக்காமல் இருந்தது கிடையாது. தற்போது மொத்தமாகவே 12 மாநிலங்களில் இருந்து மட்டும்தான் ஊர்திகள் சென்றுள்ளது. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன? ஆனால் 12 ஊர்திகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது, அந்த 12 மாநிலங்களும் பாஜக ஆளுகின்ற மாநிலங்கள். ரிசர்வ் வங்கியில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகராம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT