Published : 28 Jan 2022 08:59 AM
Last Updated : 28 Jan 2022 08:59 AM
இந்தியாவின் ஒருங்கிணைந்த 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட் வரும் 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இப்பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் உள்ளிட்ட தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரைக்கு தெற்கே உள்ள மாவட்டங்களில் விருதுநகர் - மானாமதுரை, திருநெல்வேலி – திருவனந்தபுரம் பாதை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள ரயில்பாதைகளும் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவை.
கன்னியாகுமரியில் தொடங்கி கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆய்வுப்பணி 2013-14-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில் தென்மாவட்ட வளர்ச்சிக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இது குறித்து தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி. எட்வர்ட் ஜெனி கூறியதாவது:
சமீபத்தில் மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் இந்த கோரிக்கையை தென்மாவட்ட எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
பல்வேறு மாநிலங்கள் புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்கி ,50 சதவீத நிதியை கொடுத்து புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
தமிழத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதில் கிழக்கு கடற்கரை பாதை திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, ரயில்வேதுறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உருவாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரள அரசு சபரிமலை ரயில்பாதை திட்டத்துக்கு 50சதவீத நிதி கொடுத்துள்ளது. இப்பாதையிலிருந்து வரும் வருவாயில் 50 சதவீத நிதியை கேரள அரசுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற ஒப்பந்த அடிப்படையில் புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு தமிழக அரசும் கிழக்கு கடற்கரை பாதை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...