Published : 27 Jan 2022 05:55 PM
Last Updated : 27 Jan 2022 05:55 PM
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000-க்கு மேல் அல்லது ரூ.10,000-க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் – 2022, பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 19.02.2022 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் 26.01.2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தல் - 2022ஐ முன்னிட்டு, பறக்கும் படை குழுவில் உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு முதன்மைச் செயலாளர், ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தலைமையில் இன்று (27.01.2022) ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி 200 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் பணம் ரொக்கமாகவோ அல்லது பொருட்களை தகுந்த ஆவணங்களின்றி கொண்டு செல்வதை கண்காணிக்கவும், அவற்றை பறிமுதல் செய்யவும், ஒரு மண்டலத்திற்கு மூன்று என சுழற்சி முறையில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் 45 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவில் உதவி செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் உட்பட நான்கு நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக சாதாரண தேர்தல் நடத்தை விதிகள் 26.01.2022 அன்று மாலை 6.30 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆவணங்களின்றி தனிநபர் ஒருவர் ரொக்கமாக ரூ.50,000-க்கு மேல் அல்லது ரூ.10,000-க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை கொண்டு சென்றால் பறக்கும் படைக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படும்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் 200 வார்டுகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள பறக்கும் படைக் குழுவினருக்கான வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் கூடுதல் ஆணையாளர் த.செந்தில் குமார், இ.கா.ப., , கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/துணை ஆணையாளர்கள் விஷூ மஹாஜன், இ.ஆ.ப., (வருவாய் (ம) நிதி) , சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப., (தெற்கு வட்டாரம்) , உதவி ஆணையாளர் (பொ.நி.ம.ப.) பி. ஃபெர்மி வித்யா, மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT