Published : 27 Jan 2022 11:54 AM
Last Updated : 27 Jan 2022 11:54 AM
சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளனர்.
இது குறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்.
மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் மாநில விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
தினகரன் கண்டம்:
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காததோடு, அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT