Last Updated : 01 Apr, 2016 08:38 AM

 

Published : 01 Apr 2016 08:38 AM
Last Updated : 01 Apr 2016 08:38 AM

நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு: பாமக வேட்பாளர் பட்டியல் தயார் - ஏப்.10-க்குள் வெளியாக வாய்ப்பு

சேவை மனப்பான்மை, கல்வி உள்ளிட்ட தகுதிகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி, வேட்பாளர்களை பாமக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுகிறது. கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் சுமார் 15 நாட்கள் நேர்காணல் நடத்தப்பட்டது.

நேர்காணலில் பங்கேற்றவர்களிடம் ‘சமூக முன்னேற்ற சங்கம்’ என்ற தனி அமைப்பு, சில கேள்விகளை கேட்டு அதனடிப்படையில் மதிப்பெண்களை வழங்கியுள்ளது. கட்சி தொடர்பான கேள்விகளுக்கு 50 மதிப்பெண்களும், மாவட்ட, தொகுதி பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு, செயல்திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.

பாமக எத்தனை ஆண்டுகளாக வரைவு நிதிநிலை அறிக்கை வெளியிட்டு வருகிறது? அதிமுக, திமுகவின் பண பலத்துக்கு முன்பு எப்படி வாக்குகளைப் பெறுவீர்கள்? அதற்கு புதிய யுக்தி வைத்திருக்கிறீர்களா? எம்எல்ஏவாக விரும்புவது ஏன்? வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு என்ன செய்ய திட்டம்? என்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

இதில், அதிக மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலை அந்த குழு, கட்சித் தலைமையிடம் அளித்தது. ராமதாஸ் அமைத்துள்ள சிறப்புக் குழு, இந்த பட்டியலை ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை தயாரித்துள்ளது. நேர்காணல் தேர்வில் 90 மதிப்பெண்களுக்குமேல் பெற்றவர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்திப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாமக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தற்போது ‘உங்கள் ஊர்.. உங்கள் அன்புமணி’ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். 7-ம் தேதி அவர் பயணத்தை முடித்ததும் அடுத்த ஓரிரு நாளில் பாமக தேர்தல் அறிக்கையும், வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x