Published : 26 Jan 2022 12:48 PM
Last Updated : 26 Jan 2022 12:48 PM
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கடலையூரில் காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட நாலாட்டின்புதூர் காவல் நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகியவை ன சுமார் 30 கிமீ தூரத்தில் உள்ளன.
இந்த கிராமப்புற பகுதிகளில் ஒரு பிரச்சினை என்றால், நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் இருந்து தான் போலீஸார் செல்ல வேண்டும். இதற்கு சுமார் 40 நிமிடங்கள் ஆகும். அதே போல், புகார் அளிக்க அங்குள்ள மக்கள் கோவில்பட்டியை கடந்து தான் நாலாட்டின்புதூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீர்வு காண்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
எனவே, ஆங்கிலேயர்கள் காலத்தில் வரையறுக்கப்பட்ட காவல் நிலைய எல்லைகளை மாற்றி, கடலையூர், உருளைகுடி, கருங்காலிப்பட்டி, சிதம்பராபுரம், பெருமாள்பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப்பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக கடலையூரை தலைமையிடமாக கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசு தினமான இன்று கோவில்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கேபி ராஜகோபால் அறிவித்திருந்தார்.
போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் முன்பு தேங்காயில் சூடம் ஏற்றி, உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமாகா நகரத் தலைவர் கேபி ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டாரத் தலைவர் கேபி ஆழ்வார்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்ஏ கனி, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு தேங்காய் உடைத்து கடலையூரை தலைமையிடமாகக்
கொண்டு காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT