Published : 26 Jan 2022 09:12 AM
Last Updated : 26 Jan 2022 09:12 AM
சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினாகாமராஜர் சாலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் விழா மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து, முப்படைகளின் மண்டல தலைமை அதிகாரிகள், டிஜிபி உள்ளிட்டோரை ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு வந்தார்.
சரியாக காலை 8.00 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து மூவர்ணக் கொடி மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான வேளாண்துறை சிறப்பு பதக்கம், கோட்டை அமீர் விருது ஆகியவற்றை விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதல்முறையாக.. இந்தக் குடியரசு தினவிழாவில் முதல்முறையாக முதல்வராக ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தக் குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு, பொதுமக்கள் மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள், மூத்த குடிமக்கள் விழாவை நேரில் காண அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, காணொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த ஆண்டு கரோனா காரணமாக அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோர் அடங்கிய தமிழகத்தின் அலங்கார வாகனம் தமிழக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றது.
ஏற்கெனவே திட்டமிட்டப்படி வெறும் 35 நிமிடங்களில் குடியரசு தின விழா நிறைவுபெற்றது.
மாவட்டம் தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று, அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களிலும் கலை நிகழ்ச்சிகள், கூட்டங்களைத் தவிர்த்துவிட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment