Published : 26 Jan 2022 11:25 AM
Last Updated : 26 Jan 2022 11:25 AM
மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அதிகரித்துவரும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இவ்விவகாரத்தில் தொழில் துறையினர் சார்பில் மத்திய அரசுக்கு தொடர் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதோடு, நாட்டில் கரோனா தொற்றின் 3-வது அலை உச்சம் பெற்றுள்ள நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகத்தால் தாக்கல் செய்யப்படவுள்ள நிதி நிலை அறிக்கை, அனைத்து தரப்பினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கோவை தொழில் துறையினர் கூறியதாவது:
கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் திட்டங்களை அறிவிக்க வேண்டும். பிணை இல்லாத கடன் திட்டத்தை ரூ.2 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும். அவசரகால கடன் திட்டத்தின் கீழ் பலருக்கு இன்னும் கடன் கிடைக்காமல் உள்ளது. அனைவருக்கும் கடன் கிடைக்க செய்ய வேண்டும். கடன் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20 சதவீதம் கடன் கிடைக்க செய்ய வேண்டும்.
மூலப்பொருட்கள் ஏற்றுமதியை சில மாதங்களுக்கு தடை செய்து, இறக்குமதி வரியை சில மாதங்களுக்கு முற்றிலும் நீக்க வேண்டும்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் கே.வீ.கார்த்திக்:
தொழில் நிறுவனங்களை பாதிப்பிலிருந்து காப்பாற்ற அவசர கால கடன் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் மானிய விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
இந்திய வார்ப்பட சங்க கோவைபிரிவு தலைவர் எஸ்.பால்ராஜ்:
பவுண்டரி தொழில் சார்ந்த ஏற்றுமதியில் அளிக்கப்பட்டுவந்த பல சலுகைகள் குறைக்கப்பட்டுள் ளன. சில சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இதனைக் கண்காணிப்பு செய்துஉரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தவட்டி மானியம் திரும்ப அளிக்கப்பட வேண்டும்.
கோவை வெட்கிரைண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஆர்.சவுந்திரகுமார்:
குறுந்தொழில் நிறுவனங்களுக்கான ஜாப் ஒர்க் செய்வோருக்கு ஜிஎஸ்டியை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும். ஜிஎஸ்டி ‘ரீஃபண்ட்’ தொகை அடுத்தடுத்த மாதங்களில் கிடைக்க செய்ய வேண்டும். குறு, சிறு நிறுவனங்களுக்கு எளிய முறையில் வங்கிக்கடன் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார்:
கரோனா தொற்றால் தொழில்கள் முடங்கி, பொருளாதாரத்தை இழந்து நிற்கும் குறுந்தொழில் முனைவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக அளிக்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு, குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும். ஏற்கெனவே பெற்றுள்ளகடன்களுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். ‘லேபர்சார்ஜ்’ அடிப்படையில் செய்யப் படும் ‘ஜாப் ஒர்க்’களுக்கான ஜிஎஸ்டி12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.
தொழில் முனைவோர் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி சார்ந்த பொருட்களை வாங்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிஷான் அட்டைகள் போல அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்க (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்:
குறுந்தொழில்களுக்கென தனி கடன் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஒராண்டுக்கு (நடப்பாண்டு இறுதி வரை) கடன்களை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். கரோனா தொற்று தொடங்கிய 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி, கடன் தொகையை திருப்பி செலுத்த அளிக்கப்படும் கால அவகாசம் முழுமைக்கும் அபராத வட்டி அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT