Published : 26 Jan 2022 11:32 AM
Last Updated : 26 Jan 2022 11:32 AM
தென்னிந்திய தேயிலை சாகுபடியில் தமிழகத்தின் பங்களிப்பு 60 சதவீதம். நீலகிரி மாவட்டம், கோவை மாவட்டம் வால்பாறையில் மட்டும் பல்லாயிரம் ஹெக்டேரில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. குன்னூர் தேயிலை வாரியம் நடத்திய ஆய்வில் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் என ஆறு தாலுகாக்களை உள்ளடக்கிய நீலகிரி மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் தேயிலை தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, உதகை (குந்தா தாலுகாவை உள்ளடக்கிய) தாலுகாவில் 2,839.07 ஹெக்டேரில் இருந்த தேயிலைத் தோட்டம் 2,353 ஹெக்டேராக குறைந்துள்ளது. உதகையில் மட்டும் 485.66 ஹெக்டேர் அழிக்கப்பட்டுள்ளது. குன்னூர் தாலுகாவில் 4,522.31 ஹெக்டேர் தோட்டம், 3,279.34 ஹெக்டேராகவும், கோத்தகிரியில், 2,906.06-லிருந்து 2,110.17 ஹெக்டேராகவும் குறைந்துள்ளது.
இதில், சற்றே ஆறுதல் அளிக்கும்வகையில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் 7,199.36 ஹெக்டேர் தேயிலை தோட்டம், 8,281 ஹெக்டேராக விரிவடைந்துள்ளது. இந்த பரப்பளவு குறைவுக்கு, சில ஆண்டுகளாக தேயிலைத் தொழிலில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை, அதிகரிக்கும் உற்பத்திச் செலவு ஆகியவையே காரணங்களாக உள்ளன.
தரமான தேயிலைக்கு மட்டுமே எதிர்காலம் என்ற நிலையில், தேயிலை வாரியம், உபாசி வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட தேயிலை தொழில் சார்ந்த அமைப்புகள், ‘‘தேயிலை தோட்டங்களில் மூன்று இலை, ஒரு கொழுந்து' என தரமான பசுந்தேயிலையை மட்டுமே விவசாயிகள் பறிக்க வேண்டும்; தேயிலை தூள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கரட்டு இலை, கலப்படத்தை தவிர்த்து தரமான தூளை தயாரிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் கத்தியால் தேயிலை பறித்து வருகின்றனர்.
தற்போது, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு தேயிலை தோட்டங்களில் ஆட்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் கத்தியை பயன்படுத்தி பசுந்தேயிலை வெட்டி எடுக்கப்படுகின்றன. இதனால், பசுந்தேயிலையின் தரம் குறைந்து, தேயிலை உற்பத்தியிலும் பாதிப்பு தென்பட தொடங்குவதுடன் விலையும் சரியும்.
நெலிகொலு சிறு, குறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டு சங்க நிறுவனத் தலைவர் பி.எஸ்.ராமன் கூறும்போது, "சில தேயிலை தோட்டங்களில் கத்தி கொண்டு தேயிலையை அறுத்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுவதால் தரம் பாதிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக தேயிலையின் தரம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் மீண்டும் கத்தியை கொண்டு தேயிலை அறுவடை செய்வது தொடங்கியுள்ளதால், தேயிலைத் தூளின் தரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேயிலைக்கு விலையும் குறையும். எனவே, கத்தியை கொண்டு தேயிலை அறுவடை செய்வோர் மீது, தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment