Published : 28 Apr 2016 08:26 AM
Last Updated : 28 Apr 2016 08:26 AM
சென்னை சைதாப்பேட்டை உட்பட 4 தொகுதிகளில் 5 லட்சம் மக்களை ‘வாய்ஸ் கால்’ மூலம் தொடர்புகொண்டு அந்தந்த தொகுதிகளில் அரசு செய்துள்ள சாதனைகளை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு விளக்கி வருகிறது.
முன்னாள் அமைச்சர் பொன்னை யன், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று மதியம் 12.50 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். கடந்த 3 வாரங்களாக வேன் மற்றும் நடை பயணம் மூலம் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
தென்சென்னை உட்பட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தன்னார்வ தொண்டு அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், வியாபாரிகள் நலச்சங்கங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள் ஆகியவை மூலம் சுமார் 5 லட்சம் மக்களின் செல்போன் எண்களை திரட்டி, ‘வாய்ஸ் கால்’ மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அந்தந்த தொகுதிகளில் தமிழக அரசு செய்துள்ள நலத்திட்டங் களை எடுத்துரைத்து வருகின்றனர். புதிய சாலைகள் அமைத்தல் மற்றும் விரிவாக்கம், சிறிய பஸ் சேவை, அம்மா உணவகம், பாலங்கள் அமைத்தது, பஸ் நிலையம் அமைத்தது உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. மேலும், எந்தெந்த பகுதிகளில் எப்போது, யார் பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார் என்பது உள்ளிட்ட தகவல்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக தென் சென்னை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
செல்போன் மூலம் பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய 4 தொகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்கள் மூலம் சுமார் 5 லட்சம் பேரின் செல்போன் எண்களை சேகரித்துள்ளோம். அதன்மூலம் அரசின் சாதனையை விளக்கும் வகையில் ‘வாய்ஸ் கால்’ மூலம் விளக்கி வருகிறோம். இதுதவிர, வேட்பாளர்களுக்கு முகநூலில் தனி பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் வாக்காளர்களிடம் கருத்துகளை கேட்டு, நாங்கள் பதில் அளித்து வருகிறோம். இதேபோல், வாட்ஸ் அப் உள்ளவர்களிடம் வேட்பாளர்களின் வாக்குறுதிகளை வீடியோ மூலம் பதிவு செய்து, சிறிய தொகுப்புகளாக அனுப்பி வருகிறோம். இதுபோன்ற பிரச்சார முறைகளை மற்ற தொகுதிகளிலும் விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT