Published : 26 Jan 2022 10:26 AM
Last Updated : 26 Jan 2022 10:26 AM

21-ம் நூற்றாண்டிலும் மயானத்துக்கு உடல்களை கொண்டு செல்ல 2 வழி பாதைகள் பயன்படுத்துவதை ஏற்க முடியாது: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் வேதனை

கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் நேற்று ஆய்வு செய்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர்.

திருவண்ணாமலை

21-ம் நூற்றாண்டிலும் மயானத் துக்கு உடல்களை கொண்டு செல்ல இரண்டு வழி பாதைகள் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என தேசிய தாழ்த் தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் உயிரிழந்த அருந்ததிய சமுதாய பெண்ணின் உடலை, பொது வழிப் பாதையில் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில், அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தரப்பினர் கடந்த 16-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் வீடுகள், இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இது குறித்து கடலாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 21 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதியில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹால்டர் நேற்று ஆய்வு செய்தார். மேலும் அவர், சேதமடைந்த வீடுகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார். வீடு, வீடாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், ‘தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், எதிர்காலத்தில் தங்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டனர்.

பின்னர் அருண் ஹால்டர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “21-ம் நூற்றாண்டில்உடல்களைக் கொண்டு செல்ல 2 வழி பாதைகள் என்பதை ஏற்க முடியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீது 5 நாட்களுக்கு பிறகு பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். மயானத்துக்கு செல்ல இரண்டு வழிப் பாதை முறையை ஒழித்து, உயிரிழக்கும் அனைத்து தரப்பு மக்களின் உடல்களும் ஒரே வழி பாதையில் கொண்டு செல்ல 24 மணி நேரத்தில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

ஆய்வின்போது, கூடுதல் காவல்துறை இயக்குநர் செந் தாமரை கண்ணன் (சட்டம் ஒழுங்கு), வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார், சரக டிஐஜி ஆனி விஜயா, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x