Published : 25 Jan 2022 01:10 PM
Last Updated : 25 Jan 2022 01:10 PM

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

கோப்புப் படம்

சென்னை: டெல்லியில் நாளை நடக்கவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பி.பாபு தாக்கல் செய்த மனுவில், 'நாட்டின் 73-ஆவது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி ராஜபாதையில் நடக்கும் அணிவகுப்பில், முப்படைகளின் அணிவகுப்புடன், மாநிலங்களின் கலாச்சாரங்களை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடத்தப்படும். இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கான வரைபடத்துடன் விண்ணப்பித்திருந்த நிலையில், தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நாளை நடக்கவுள்ள அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்தது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் மற்றும் நிராகரித்த உத்தரவு நகல் உள்ளதா என கேள்வி எழுப்பினர். இதற்கு, எழுத்துபூர்வமான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், முதல்வரும் இதை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணிவகுப்பில் அலங்கார ஊர்திக்கு அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது, நிராகரித்தது தொடர்பான ஆவணங்களை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. மேலும், கடைசி நேரத்த்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதால், இதில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x