Published : 25 Jan 2022 01:36 PM
Last Updated : 25 Jan 2022 01:36 PM
அவிநாசி அருகே பாப்பான்குளம் பகுதியில் நேற்று தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் உள்ளிட்ட மூவர் காயம் அடைந்தனர். 12 கேமராக்கள், ட்ரோன் கேமரா மற்றும் கூண்டு அமைத்து சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பான்குளத்தை சேர்ந்தவர் வரதராஜன் (63). இவர், தனது தோட்டத்தில் கடந்த 2 நாட்களாக சோளத்தட்டு அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவருடன், விவசாய கூலித் தொழிலாளி மாறன் (66) என்பவரும் இப்பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று அதிகாலை வழக்கம்போல இருவரும் தோட்டத்தில் அறுவடைப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, திடீரென அங்கு புகுந்த சிறுத்தை, மாறனை தாக்கியது.
இதில், அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த வரதராஜனையும் சிறுத்தை தாக்கியது. இதில் அவரது தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிவந்ததால், சிறுத்தை தப்பியோடியது.
தகவலின்பேரில் சேவூர் போலீஸார், திருப்பூர் கோட்ட வனச்சரக ஊழியர்கள், வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காயம் அடைந்த இருவரையும் மீட்டு, அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தலைமையிலான வனத்துறையினர், அருகில் வசித்து வந்த தோட்டக்காரர்களிடம் விசாரித்தனர். அவர்களும், சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்ததால், வலை விரித்தும், கூண்டு அமைத்தும், ட்ரோன் பயன்படுத்தியும் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாப்பான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மரங்களில் கேமராவை பொருத்தி, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாப்பான்குளம் பகுதியில் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டிருந்த அமராவதி வனச்சரகத்தை சேர்ந்த வேட்டைத்தடுப்புக் காவலர் மணி என்பவரை, புதரில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கியது. இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வனத்துறையினரைக் கண்டதும், மீண்டும் சிறுத்தை தலைமறைவானது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மணி சிகிச்சை பெற்று வருகிறார். சிறுத்தை நடமாட்டம் உறுதியான நிலையில், தற்போது அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT