Published : 25 Jan 2022 12:21 PM
Last Updated : 25 Jan 2022 12:21 PM
கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் இடையேயான 162 கி.மீ தேசிய நெடுஞ்சாலை (விகேடி சாலை), தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் கீழ் 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இப்பணிக்காக இச்சாலை2009-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ரூ.1,200கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணியில்தொய்வு ஏற்பட்டதால் ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் ஒருவழியாக நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் நியமிக்கப்பட்ட 2018-ம் ஆண்டு முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
விக்கிரவாண்டி முதல் பண்ருட்டி வரையிலும், சேத்தியாத்தோப்பு முதல் கும்பகோணம் வரையிலும் பணிகள் நடைபெற்று, மொத்தத்தில் இதுவரை 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இருப்பினும் பண்ருட்டி முதல் மருவாய் வரையிலான 45 கி.மீ சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஏற்கெனவே இருந்த சாலைகளையும் பள்ளம் தோண்டி, கரடு முரடான சாலையாக மாற்றிவிட்டனர். ஆங்காங்கே சாலைகள்மடை மாற்றி விடப்படுவதால்,இருசக்கர வாகனத்தில் செல்வோரும், கனரக வாகனத்தில் செல்வோரும் விபத்தில் சிக்கிஉயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
குறிப்பாக காடாம்புலியூரை அடுத்த பாவைக்குளம், கொள்ளுக் காரன்குட்டை ஆகிய பகுதிகளில் பறக்கும் புழுதிகளால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகிவருகின்றனர். இலகு ரக வாகனங்களும், கனரக வாகனங்களும் பழுதாகி ஆங்காங்கே நிற்கும் அவலமும் தொடர்கிறது.
ஒருபுறம் குண்டும் குழியுமாகவும், மற்றொரு புறம் பாலம் அமைப்பதற்காக போடப்பட்டுள்ள கான்கீரீட் கம்பிகள் சாலை பகுதியில் நீட்டிக் கொண்டிருப்பதாலும், வாகன ஓட்டிகள் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். இதனால் சென்னை-கும்பகோணம், தஞ்சை செல்லும் அரசுப் பேருந்துகள், விக்கிரவாண்டி, பண்ருட்டி, வடலூர் மார்க்கமாக செல்வதை தவிர்க்கின்றன. அதற்கு பதிலாக விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் செல்வதால் வாகன எரிபொருள் விரயமும், பயணிகளுக்கு கூடுதல் செலவும் ஏற்படுவதாக அரசுப் பேருந்து நடத்துநர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, "இந்தியாவின் பிரபல முன்னணிநிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அவர்கள் சப்-காண்ட்ராக்ட் விட்டதில், அவர்கள் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்காததால், அவர்கள் வேலையை அப்படியேவிட்டுச் சென்றனர். இதனால் பணிகள் பாதியில் நிற்கிறது. சப்-கான்ட்ராக்டர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாலும் இப்பிரச்சினை ஏற்பட்டது" என்றனர். சாலைப் பணிகள் குறித்து கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷிடம் தொடர்பு கொண்டபோது அவர் பேச முன்வரவில்லை. இதையடுத்து நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் சபா.ராஜேந்திரனிடம் கேட்டபோது, "சாலைப் பணிகள் மந்தமாக நடைபெறுவது குறித்து சட்டப்பேரவையில் பேசியபோது, வேலை செய்தனர். தற்போது மீண்டும் கிடப்பில் போட்டுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிக ளிடம் பேசி, ஒப்பந்ததாரரிடம் விரைந்து முடிக்க அறிவுறுத்தியி ருக்கிறேன். தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஒப்பந்ததாரரை மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளேன்" என்றார்.
இதுகுறித்து விகேடி சாலைத் திட்ட இயக்குநர் ஜெய்சங்கரிடம் பேசியதில், "கரோனா முடக்கம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது உண்மை தான். இருப்பினும் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காத ஒப்பந்த நிறுவனத்திற்கு கடந்த ஜூலை மாதமே எச்சரிக்கை கடிதம் கொடுத்துள்ளோம்.
அதன் கெடு மார்ச் மாதம் வரை உள்ளது. மார்ச் மாதத் திற்குள் அவர்கள் பணிகளை முடிக்கவில்லை என்றால் நீக்கவும் முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT