Published : 24 Jan 2022 05:44 PM
Last Updated : 24 Jan 2022 05:44 PM
சென்னை: கொடுங்கையூர் சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்துவிட்டு சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் முகக்கவசம் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிகவும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
காவல் துறையின் இத்தகைய செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இதுபோன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது. சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கைது செய்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கியதோடு மாணவன் மீதே பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுங்கையூர் காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், மனித உரிமைக்கு எதிரான ஆணவப் போக்கையும் காட்டுகிறது.
சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை மிகவும் கடுமையாகத் தாக்கிய காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் கடுமையான பிரிவுகளைச் சேர்க்காமல் சாதாரண பிரிவுகளைச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதும், இதுவரை அவர்களைக் கைது செய்யாமல் இருப்பதும் வருந்ததக்கது.
ஆகவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான வழக்கு பிரிவுகளைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மனித உரிமைக் கல்வி மற்றும் உளவியல் கல்வி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு தவறு செய்யும் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை உண்டாக்க வழி வகை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT