Published : 24 Jan 2022 03:30 PM
Last Updated : 24 Jan 2022 03:30 PM

முகக்கவசம் அணியவில்லை என்பதால் மாணவன் மீது தாக்குதல் நடத்துவதா?- சரத்குமார் கண்டனம்

சரத்குமார் | கோப்புப் படம்.

சென்னை: சட்டக்கல்லூரி மாணவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மிஆ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இன்று வெளியட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவர் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி, காவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்ததையடுத்து, முகக்கவசம் அணிந்திருந்த மாணவர் ரஹீம் அபராத தொகை செலுத்த மறுத்ததால், காவலர்கள் மாணவர் ரஹீமை கைது செய்து, காவல்நிலையத்தில் அவரை நிர்வாணப்படுத்தி, அவர் மீது சிறுநீர் கழித்து, அருவருத்தக்க, கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அறிந்து பேரதிர்ச்சியும், பதட்டமும் அடைந்தேன்.

ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை போன்று, காவல்நிலையத்தில் மனிதாபிமானமின்றி நடந்தேறும் கொடூர தாக்குதல்கள் இனியும் தொடராமல் தடுத்து நிறுத்தப்பட இந்த பிரச்ச்னையை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டையை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர் மீது இரக்கமற்ற தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிற காவலர்கள் சட்டத்தினை கையிலெடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலை மாறும்.

மக்கள் பாதுகாப்புக்காக நேரம் பார்க்காமல் உழைக்கும் காவலர்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் மரியாதை இதுபோன்ற சில விரும்பத்தகாத செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையினர் மீது அவநம்பிக்கையும், அச்சமும் உருவாக்கிவிடக்கூடாது.

இப்பிரச்சனையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கவனம் செலுத்தி சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமின் பாதுகாப்பையும், காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x