Published : 24 Jan 2022 02:59 PM
Last Updated : 24 Jan 2022 02:59 PM

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பது அதிகார அத்துமீறல்: இரா.முத்தரசன்

இரா.முத்தரசன்

சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்துமீறலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம், ரூ.4,600 கோடிமதிப்பில் 2-வது கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்த உடனே இத்திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கர்நாடக அரசின் கருத்துக்கு தமிழக அரசியல் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடி நீரில் புளோரைடு அளவுக்கு மீறிய அடர்த்தியாக இருப்பது கண்டறியப்பட்டது. பல் உதிர்தல், எலும்புகள் பலவீனமாதல், சிறுநீரகப் பாதிப்புகள் என பல பாதிப்புகளுக்கு ஆளாகி வந்த மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கி சுமார் 40 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

மக்கள் நல்வாழ்வையும் சுகாதாரத்திலும் அக்கறை காட்டிய, இன்றைய முதல்வர், துணை முதல்வர் உள்ளாட்சி துறை நிர்வாகத்தில் இருந்து போது, அப்போதைய முதல்வரான கருணாநிதி 2008 பிப்ரவரி 26ஆம் தேதி, அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

ஜப்பான் நாட்டு கூட்டுறவு வங்கி உதவியுடன் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் என்பதும் முற்றிலும் தமிழ்நாடு எல்லைக்குள் அமைத்திருப்பது பில்லிகுண்டுலுக்கு கீழ் பகுதியில் தமிழகத்திற்கு சட்டப்பூர்வ உரிமையுள்ள தண்ணீரை ஆதாரமாகக் கொண்டது. இதில் கர்நாடக அரசு கருத்துச் சொல்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை.

மேகதாது அணை கட்டும் பிரச்சினையை திசைதிருப்ப கர்நாடக முதலமைச்சர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்ப்பது அதிகார அத்துமீறலாகும். தமிழக மக்களின் ஆத்திரத்தை தூண்டும் மலிவான செயலாகும். கர்நாடக முதல்வரின் வரம்பு மீறிய செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பிட்ட கால வரம்பில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x