Published : 24 Jan 2022 11:49 AM
Last Updated : 24 Jan 2022 11:49 AM

காவல் ஆணையம் அமைக்கும் விதிகளில் திருத்தப்பட்டுள்ளதா? - தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் காவல் ஆணையம் அமைக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் 'காவல்துறை புகார் ஆணையம்' அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, காவல்துறையினருக்கு எதிராக புகார் அளிக்க மாநில அளவில் உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமையிலான புகார் ஆணையமும், மாவட்ட அளவில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையிலான புகார் ஆணையமும் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழகத்தில் 'காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அமைக்கப்பட்ட ஆணையத்தில் நீதிபதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, மாநில அளவிலான புகார் ஆணையத்திற்கு உள்துறை செயலாளர் தலைமையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். மாவட்ட அளவிலான புகார் ஆணையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைக்கப்பட்ட 'காவல்துறை சீர்த்திருத்த அவசர சட்ட' விதிகளை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும், காவல் புகார் ஆணையங்களை அமைகக்கோரி சரவணன் தட்சிணாமூர்த்தி என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், கடந்த வாரம் காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே சுமூக உறவு நிலவும் வகையில் புதிய காவல் ஆணையத்தை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் அமைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. உள்துறை செயலாளர் தலைமையில் குழு அமைப்பதற்கான விதிகளை வகுத்துள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் விதிகளில் திருத்தம் செய்யபட்டதா என தமிழக அரசு ஜனவரி 31-ஆம் தேதி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.அவ்வாறு விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விவரங்களையும், நீதிமன்ற உத்தரவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x