Published : 20 Apr 2016 08:41 AM
Last Updated : 20 Apr 2016 08:41 AM
நோட்டாவுக்கு பெரும்பான்மை வாக்குகள் பதிவாகும் தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரவலாக காணப்படுகிறது.
‘இப்போ இருக்கிற எந்தக் கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லையா ..? கவலைப்படாதீங்க; உங்களுக்காகத்தான் இருக்கவே இருக்கு நோட்டா. நீங்க நோட்டாவுல ஓட்டு போடுங்க. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்ல 35 சதவீதத்துக்கும் மேல் நோட்டாவுல ஓட்டு பதிவாகி இருந்தால் எந்தக் கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது. அதன்பின்னர் 6 மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். பின்பு மீண்டும் தேர்தல் நடைபெறும். இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம்..’
இத்தகைய வாசகங்கள் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதேபோல ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களைவிட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவானால் அங்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.
விதி 49 ‘ஓ’
வாக்காளர் ஒருவர் தேர்தலில் வாக் களிக்க விரும்புகிறார். எனினும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க அவருக்கு விருப்பமில்லை. இந்தச் சூழலில் வாக்காளரின் வாக்குரிமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, தேர்தல் விதி 49-ஓ அடிப்படையில் ஒரு வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தந்தது.
அதன்படி, வாக்குச் சாவடிக்குள் செல்லும் வாக்காளர் யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், வாக்குச்சாவடி அலு வலரிடம் அதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு வாக்களிக்க விரும்பாதவர்களின் விவரங்களை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 17-ஏ இருக்கும். அந்தப் படிவத்தில் வாக்காளர் தனது பெயரை பதிவு செய்து, கையொப்பம் இட வேண்டும். இந்த சட்ட ரீதியான வாய்ப்பைப் பயன்படுத்தி எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்பதை ஏராளமான வாக்காளர்கள் பதிவு செய்தனர். இதனால் விதி 49-ஓ பிரபலமானது.
இதற்கிடையே, விதி 49-ஓ சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப் பட்டது. தான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று ஒரு வாக்காளர் முடிவு செய்தால், அவரது முடிவு சட்டப்படி ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும். விதி 49-ஓ மூலம் இத்தகைய ரகசியத்தை பாதுகாக்க முடியாது. ஆகவே, யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற வாக்காளரின் உரிமையை வாக்குச் சீட்டு அல்லது வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே ரகசியமாக பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி உத்தரவிட்டது.
நோட்டா அறிமுகம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்தே ‘நோட்டா’ அறிமுகம் ஆனது. வாக்குச்சீட்டு மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பட்டியலின் கடைசியாக நோட்டா (NOTA) என்ற பகுதியும் உருவாக்கப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி தேர்தல் ஆணையம் ஒரு சுற்றறிக்கை அனுப் பியது. அதில், வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதி வானால் என்ன செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
‘ஒருவேளை எங்கேயாவது வேட்பாளர் கள் பெறும் வாக்குகளைவிட, நோட் டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகலாம். எனினும், நோட்டாவுக்கு அடுத்ததாக எந்த வேட்பாளர் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு, அவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்’ என்ற தெளிவான வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
ஆக, தனது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை சட்ட ரீதியாக பதிவு செய்வதற்கான ஒரு ஏற்பாடுதான் நோட்டா. இதைத் தவிர, நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தொகுதியின் வழக்கமான தேர்தல் நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படாது.
வாக்களிப்போர் சதவீதத்தை அதிகரிப்ப தற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேபோல நோட்டா குறித்த வதந்திகளை தடுக்கும் வகையிலும் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT