Published : 24 Jan 2022 10:30 AM
Last Updated : 24 Jan 2022 10:30 AM

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரமாகும் இறைச்சி கழிவுகள் இயற்கை உரமாக மாற்றம்: நகராட்சி நிர்வாகத்தின் முயற்சிக்கு வரவேற்பு

குன்னூர்

மக்கள் அடர்த்தி மிகுந்த மாநகரங்கள், நகரங்களில் ஒவ்வொரு நாளும் குவியும் டன் கணக்கான கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய முடியாமல் நிர்வாகங்கள் திணறி வருகின்றன. அதேபோல, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரிமாவட்டத்திலும் உதகை, கூடலூர்,நெல்லியாளம் ஆகிய நகராட்சிகளும், கழிவுகளை மேலாண்மை செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன.

இந்நிலையில், குன்னூர் நகராட்சியின் அடுத்த சாதனை யாக கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகள் மற்றும் காய்கறிக்கழிவுகளை தன்னார்வலர் ஒருவரின் தொழில்நுட்ப உதவியுடன், 30 நாட்களில் உயர் ஊட்ட இயற்கை உரமாக மாற்றி அசத்தி வருகின்றனர். குன்னூர் ஓட்டுப்பட்டறை பகுதியில் செயல்படும்நகராட்சி குப்பைக்கிடங்கை, முன்மாதிரி கிடங்காக ‘கிளீன் குன்னூர் அமைப்பு' மாற்றி வருகிறது.

இதுதொடர்பாக அந்த அமைப்பைசேர்ந்த வசந்தன் கூறும்போது, ‘‘குன்னூர் நகராட்சியில் ஒவ்வொரு நாளும் 4 முதல் 5 டன் கழிவுகள் சேகரமாகின்றன. இவற்றில் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக்கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து, குறிப்பிட்ட வெப்பநிலையில் உலரவைத்தும், மக்கச் செய்தும் உரமாக மாற்றுகிறோம். முறையாகபதப்படுத்த, நல்ல காற்றோட்டம் இருக்கும் இடம் தேவைப்படுகிறது. தொடர்ந்து பதப்படுத்தி வரும் நிலையில், 30 நாட்களில் உயர் ஊட்டம் நிறைந்த இயற்கை உரமாக மாறுகிறது.

இந்த உரம் கிலோ ரூ.3 முதல் ரூ.10 வரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றுவதால், சுற்றுச்சூழலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன’’ என்றார்.குன்னூர் நகராட்சியின் இந்த முயற்சி, சூழலியல் செயற்பாட்டாளர்களிடம் வர வேற்பை பெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x