Published : 06 Apr 2016 12:34 PM
Last Updated : 06 Apr 2016 12:34 PM

கூட்டணி முடிவாகாததால் தவிக்கும் தமாகா: வலுவான வாக்கு வங்கி இருந்தும் குமரி நிர்வாகிகள் சோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமாகா கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி இருந்தும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி உறுதியாகாததால் கட்சியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த பலரும் சோகத்தில் உள்ளனர்.

தமிழக அளவில் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் 63 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாலும், 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகள் அடக்கம். இதில் கிள்ளியூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஜான் ஜேக்கப், இப்போது தமாகாவில் மேற்கு மாவட்டத் தலைவராக உள்ளார்.

கனவு கலைந்தது

வரும் தேர்தலில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளை தமாகாவும் குறி வைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி திமுகவோடு கூட்டணி சேர்ந்து விட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு இடம் கிடைக்கும் என்றும், அங்கு மூன்று தொகுதிகளை கேட்டுப் பெறலாம் என்றும் குமரி தமாகாவினர் கனவில் இருந்தனர்.

ஆனால், அதிமுகவோ கிள்ளியூர், விளவங்கோடு, குளச்சல் உட்பட 227 தொகுதிக ளுக்கு வேட்பாளரை அறிவித்து விட்டது. இதனால் குமரியில் தமாகா வினர் வலிமையாக இருந்தும், கூட்டணி உறுதியாகாததால் சங்கடத்தில் உள்ளனர்.

கூட்டணி குழப்பம்

நாகர்கோவிலில் சில மாதங்களுக்கு முன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருவாரியான கூட்டம் கூடியது. குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ ஜான் ஜேக்கப், குளச்சல் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ குமாரதாஸ் ஆகியோர் தமாகா சார்பில் போட்டியிட தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் இப்போது பிரதான கட்சிகள் எதுவும் கைகோர்க்காததால் குமரி தமாகாவினர் விழி பிதுங்கியுள்ளனர்.

ரகசிய சர்வே

ஒருவேளை தனித்தோ, மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்தோ களம் கண்டால் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்றும், தமாகாவினர் ரகசிய சர்வே எடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி மீது ஈழப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு நல்ல கூட்டணி கிடைக்காது என்று தான் குமரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் தமாகாவுக்க்கு தாவினர். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் தமாகாவுக்கு கூட்டணி உறுதியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x