Published : 24 Jan 2022 09:54 AM
Last Updated : 24 Jan 2022 09:54 AM
மதுரை வைகை ஆறு யானைக்கல் தரைப்பாலத்தையொட்டி நெடுஞ்சாலைத்துறை சார்பில் செல்லூருக்குச் செல்லும் வழியில் சாலையைச் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாமல் வைகை ஆற்றை சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து மீனாட்சி கல்லூரி வழியாக வைகை ஆறு யானைக்கல் தரைப் பாலத்தையொட்டி செல்லூர் செல்லும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் சென்றால் செல்லூர் வழியாக தத்தனேரி, ஆரப்பாளையம் பஸ்நிலையம், பாத்திமா கல்லூரி சந்திப்பு மற்றும் திண்டுக்கல் செல்லும் வாகன ஓட்டிகள் நகருக்குள் சென்று நெரிசலில் சிக்காமல் எளிதாகச் சென்றுவிடலாம்.
மேற்குப்பகுதிகளுக்குச் செல்வதற்கான ஒரே வழி மீனாட்சி கல்லூரிச் சாலைதான். தற்போது மீனாட்சி கல்லூரி அருகே யானைக்கல் தரைப்பாலம் வைகை ஆற்றையொட்டி செல்லும் இந்தச் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சாலையைச் சீரமைக்கும் பணி களை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணி மந்த கதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துகொண்டே இருக்கிறது.
அதனால், கோரிப்பாளையத் தில் இருந்து திண்டுக்கல், ஆரப் பாளையம், பாத்திமா கல்லூரி சந்திப்புக்குச் செல்லவேண்டிய வாகன ஓட்டிகள் இந்த வழியைப் பயன்படுத்த முடியவில்லை.
மாறாக ஏவி மேம்பாலம், சிம்மக்கல், மெஜுரா கோட்ஸ், புதுஜெயில் ரோடு வழியாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மற்றொரு வழியாக வைகை ஆற்றின் தென்கரைக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் வைகை ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்லூருக்குச் சுற்றி வர வேண்டி உள்ளது.
வைகை ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்த தரைப்பாலமும் மூடப்பட்டுவிடும். அதனால், ஆரப்பாளையம், பாத்திமா கல்லூரி சந்திப்பு மற்றும் பரவை, திண்டுக்கல் செல்லும் வாகன ஓட்டிகள் மற்ற வாகனங்களுடன் சிம்மக்கல், மெஜுரா கோட்ஸ் அல்லது பெரியார் பஸ் நிலையம், அரசரடி வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் நேரமாவதோடு போக்கு வரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு எரிபொருளும் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒரு சாலையில் சீரமைப்புப் பணியைத் தொடங்குவதற்கு முன்பு சாலையின் பயன்பாடு, முக்கியத்துவம் உட்பட பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர் மக்கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT