Published : 23 Jan 2022 05:59 PM
Last Updated : 23 Jan 2022 05:59 PM
சென்னை: முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளரும், தமிழக அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநருமான ஆர்.நாகசாமி (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
வாழ்க்கை குறிப்பு: இந்திய வரலாறு, தொல்லியல் மற்றும் கல்வெட்டு எழுத்துக் குறிப்பு அறிஞரான ஆர்.நாகசாமி, கடந்த 1930-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் மொழியியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்.
புணே பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலைகள் மற்றும் தொல்லியல் தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் தொல்லியல் துறையில் பயிற்சியெடுத்த ஆர்.நாகசாமி கடந்த 1959-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் பாதுகாவலராகப் பணியில் இருந்தார்.
கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு தொல்லியல் துறையின் உதவி சிறப்பு அதிகாரியாகவும், பின்னர் 1966-ஆம் ஆண்டு முதல் 1988-ஆம் ஆண்டு வரை தொல்லியல் துறையின் முதலாவது இயக்குநராகவும் இருந்தார். பணி ஓய்வுக்குப் பின்னர் கல்வெட்டு இயக்கத்துக்கு தலைமை வகித்த அவர், தொல்லியல் துறையில் மத்திய அரசுக்கு ஆலோசகராக இருந்தார்.
கல்வெட்டு, கலை, இசை, நாட்டியம், தமிழ் வரலாறு உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களையும் மறைந்த ஆர்.நாகசாமி எழுதியுள்ளார்.
பத்மபூஷண் விருது: மறைந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமியின் பணிகளைப் பாராட்டி அவரை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT