Published : 23 Jan 2022 05:14 AM
Last Updated : 23 Jan 2022 05:14 AM
திருவையாறில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 175-ம்ஆண்டு ஆராதனை விழாவில், தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி, இசைக் கலைஞர்கள் இசையஞ்சலி செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமி நினைவிடத்தில், ஆண்டுதோறும் 5 நாட்கள் தியாகராஜர் ஆராதனை விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில், 175-வது ஆண்டு விழாவை கரோனாபரவல் காரணமாக ஒருநாள் மட்டும்நடத்த தியாக பிரும்ம மகோத்சவ சபையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, விழாவுக்காக கடந்த டிச.22-ம் தேதி பந்தல்கால் நடப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை 6.30 மணிக்கு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்தஇல்லத்தில் இருந்து இசைக் கலைஞர்கள் உஞ்சவிருத்தி பஜனை பாடியபடி, முக்கிய வீதிகள் வழியாக தியாகராஜர் நினைவிடத்துக்கு வந்தனர். பின்னர், விழாவை தியாகபிரும்ம மகோத்சவ சபையின் தலைவரும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.
திரவியங்களால் அபிஷேகம்
விழா பந்தலில் காலை 8.30 முதல்9 மணி வரை நாகஸ்வர இசைநிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து,மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அப்போது, தியாகராஜர் சிலைக்கு பால், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பிரபஞ்சம் பாலச்சந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடக்கத்தில் நாட்டை ராகம்,ஆதி தாளத்தில் அமைந்த ‘ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய ராகங்களில் பாடல்களை இசைக்கலைஞர்கள் ஒருமித்த குரலில் பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் ஸ்ரீ தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். இதில், இசைக்கலைஞர்கள் மஹதி, விசாகாஹரி, கடலூர் ஜனனி,சுசித்ரா, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பஞ்சரத்ன கீர்த்தனை நிறைவு பெற்றதும், நாகஸ்வர கச்சேரி, உபன்யாசம் நடைபெற்றது. பின்னர், மதியம் தியாகராஜரின் உற்சவர் சிலை ஊர்வலம், ஆஞ்சநேயர் உற்சவம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழாவில் குறைந்தளவிலான இசைக் கலைஞர்கள், இசை ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
விழாவில் பங்கேற்ற ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தியாகராஜரின் 175-வதுஆண்டு ஆராதனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறிப்பாக, கரோனா பரவல் காலத்தில் மத்திய,மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, தியாகராஜருக்கு முறையான அஞ்சலியை செலுத்தி, மனநிறைவுடன் விழா நடைபெற்றுள்ளது. இதில், தங்களின் உடல்நலத்தையும் பாராமல், பல்வேறு இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டது பெருமைக்குரியது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT