Last Updated : 23 Jan, 2022 06:47 AM

2  

Published : 23 Jan 2022 06:47 AM
Last Updated : 23 Jan 2022 06:47 AM

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மறு பிரேத பரிசோதனை தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தஞ்சாவூர் அருகே தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் இல்லாததால், மறு பிரேத பரிசோத னைக்கு உத்தரவிட வேண்டியது இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த, 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரை விடுதி கழிப்பறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியிருந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், பாஜகவினரும் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி அல்லது வேறு விசாரணை அமைப் புக்கு மாற்றக் கோரி அவரது தந்தை முரு கானந்தம் உயர் நீதிமன்றக் கிளையில் அவசர மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு காணொலி வழியாக நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டபின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சந் தேகம் இல்லை. எனவே, உடலை பெற்றோர் இன்று (ஜன.22) பெற்றுக் கொண்டு, இறுதிச் சடங்குகளை நடத்தி முடிக்க வேண்டும். சொந்த கிராமத்துக்கு உடலை கொண்டு செல்ல, தஞ்சை மாவட்ட நிர்வாகம் உதவிகளை செய்ய வேண்டும். மனுதாரர், அவரது மனைவி ஆகியோர் தஞ்சை மாவட்ட நீதிபதி நியமிக்கும் நீதித்துறை நடுவர் முன்பு நாளை (ஜன.23) நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும். அந்த வாக்குமூலங்களை மூடி முத்திரையிட்ட கவரில் ஜன.24-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

மதமாற்றம் தொடர்பான மாணவியின் கருத்தை வீடியோவில் பதிவு செய்தவரை போலீஸார் தொந்தரவு செய்யக் கூடாது. போலீஸாரின் விசாரணை மாணவி எந்த சூழ்நிலைகளால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நோக்கியே இருக்க வேண்டும். அது வீடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுப்பதாக இருக்கக் கூடாது. அடுத்த விசாரணை ஜன.24-க்கு தள்ளி வைக்கப்படு கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

பெற்றோருக்கு ஆறுதல்

விசாரணையின்போது மாணவியின் தந்தை முருகானந்தமும், தாயாரும் காணொலிக் காட்சி வழியாக கண்ணீருடன் ஆஜராகினர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய நீதிபதி, ‘அதிபுத்திசாலி மகளை இழந்துவிட்டீர்கள். உங்களின் வருத்தம் புரிகிறது. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நாளை (இன்று) நீதித்துறை நடுவர் முன்பு இருவரும் நேரில் ஆஜராகி, உங்களிடம் மகள் என்ன சொன்னார் என்பதையும், உங்கள் மனதுக்கு சரியெனப்படுவதையும் தைரியமாக சொல்லுங்கள்’ என்றார்.

மாணவி உடல் சொந்த ஊரில் தகனம்

நீதிமன்றத்தின் உத்தரவின்படி நேற்று மாலை மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, கலால் பிரிவு டிஎஸ்பி மோகன்தாஸ் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, மாணவியின் சடலத்துக்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் அய்யப்பன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், விஎச்பி மாநிலத் தலைவர் சேதுராமன் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். அரியலூர் மாவட்ட எஸ்.பி கே.பெரோஸ்கான் அப்துல்லா, டிஎஸ்பி மதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x