Published : 23 Jan 2022 05:53 AM
Last Updated : 23 Jan 2022 05:53 AM
தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி அண்மையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், சிறுமியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தை பாஜகவினர் நேற்று முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு, பாஜக மாநில துணைத் தலைவர் கருப்புஎம்.முருகானந்தம் தலைமை வகித்தார். பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம், மகளிரணி தலைவர் மீனாட்சி, மாவட்டத் தலைவர்கள் இளங்கோ, சதீஷ், விஎச்பி மாநில பொறுப்பாளர் சேதுராமன், துணைத் தலைவர் புரட்சி கவிதாசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், “மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மதம் மாற வற்புறுத்தியதால்தான், அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டார். எனவே, அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும். பள்ளியைமூட வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்ளிட்ட500 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறியது:
பள்ளியை நடத்தி வரும் ராக்குலின் மேரி உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாணவியைஅவரது பெற்றோரின் முன்னிலையில் மதம் மாறும்படி வற்புறுத்தி உள்ளனர். இதற்கு மாணவியும், பெற்றோரும் மறுத்துவிட்டனர்.
இதன் காரணமாக, கழிப்பறை சுத்தம் செய்வது உட்பட கடுமையான வேலைகளை செய்யச் சொல்லி மாணவியை நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால், மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். எனவே, அப்பள்ளியை உடனடியாக மூடவேண்டும். அரசு உதவிபெறும் பள்ளியில் மதபோதனைகளை நடத்தக்கூடாது.
மேலும், மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணையை உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக தமிழக அரசு மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT