Published : 23 Jan 2022 08:37 AM
Last Updated : 23 Jan 2022 08:37 AM

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலிலிருந்து தவறி விழ முயன்ற பயணியை மீட்ட போலீஸாருக்கு பாராட்டு

ஈரோடு ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழ முயன்ற வடமாநில இளைஞரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்.

ஈரோடு

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றபோது தவறி தண்டவாளத்தில் விழ முயன்றவரை ஈரோடு ரயில்வே போலீஸார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் செகந்திராபாத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலில் அசோக் தாஸ் (32) என்பவர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர் மீண்டும் ஈரோட்டுக்கு திருவனந்தபுரம் ரயிலில் வந்து கொண்டிருந்தார். நேற்று ஈரோடு ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது அசோக்தாஸ் தூங்கிக்கொண்டிருந்ததால் நிற்கும்போது இறங்காமல், ரயில் புறப்படும் போது திடீரென கண்விழித்து இறங்க முயன்றார்.

அப்போது, எதிர்பாராத விதமாக தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழும் நிலையில் தடுமாறினார். இதை அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த தலைமைக் காவலர்கள் பழனிசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் கவனித்து துரிதமாக செயல்பட்டு அசோக்தாசை பிடித்து இழுத்து காப்பாற்றினர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ரயில்வே போலீஸார் பயணியை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய தலைமைக் காவலர்களை காவல் துறை அதிகாரிகள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x