Published : 22 Jan 2022 12:12 PM
Last Updated : 22 Jan 2022 12:12 PM

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்க்க கர்நாடக அரசுக்கு உரிமையில்லை: அன்புமணி கண்டனம்

கோப்புப் படம்

சென்னை: "தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களை பாதுகாக்க இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூற கர்நாடக அரசுக்கு உரிமையில்லை" என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்குடன் செயல்படுத்தப்படவுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதைக் கூட கர்நாடக அரசு எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் மிக மிக பின் தங்கிய மாவட்டங்களாக இருப்பவை தருமபுரியும், கிருஷ்ணகிரியும் தான். இந்த இரு மாவட்டங்களும் இணைந்து ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டமாக இருந்த போதே அங்கு நிலத்தடி நீரில் புளோரைடு அதிக அளவில் கலந்திருப்பதால் அங்குள்ள மக்களுக்கு பற்சிதைவு ஏற்பட்டு வந்தது. அதற்கு தீர்வு காணும் நோக்குடன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவிரி நீரை சுத்திகரித்து வழங்குவதற்காக, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக தொடங்கப்பட்ட நாளில் இருந்தே வலியுறுத்தியும், போராடியும் வந்துள்ளது. அதன்பயனாக 1998ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, 2008ம் ஆண்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2013ம் ஆண்டில் அத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போதிலும், தருமபுரி - கிருஷ்ணகிரி மக்களுக்கு இதுவரை முழுமையான அளவில் காவிரி நீரை விநியோகிக்க முடியவில்லை.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட காவிரி நீரை வழங்குவதற்கு வசதியாக ஒகேனக்கல் திட்டத்தை விரிவாக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியதை ஏற்று, தருமபுரி மாவட்டத்திற்கான வளர்ச்சித்திட்டப் பணிகளை நேற்று முன்நாள் தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ரூ.4,600 கோடியில் இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அத்திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது, நிதியுதவி பெறுவது என்று கடந்து செல்ல வேண்டிய தொடக்கக்கட்ட பணிகள் ஏராளமாக உள்ளன. அதற்குள்ளாகவே அத்திட்டத்தை கர்நாடகம் எதிர்ப்பது, இச்சிக்கலில் அரசியல் லாபம் காணத் துடிப்பதையே காட்டுகிறது.

இரண்டாம் கட்ட ஒகனேக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் நிலப்பகுதி கர்நாடக எல்லைக்குள் வருகிறது; இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக காவிரியிலிருந்து தண்ணீர் எடுப்பது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது என்று கர்நாடக அமைச்சர் கர்ஜோல் கூறியிருப்பது அபத்தமானது; காவிரி சிக்கலில் அவருக்கு போதிய புரிதல் இல்லாததையே இது காட்டுகிறது. கர்நாடக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள சிக்கல்கள் அனைத்தும் ஏற்கனவே தீர்க்கப்பட்டவை.

காவிரி சிக்கலைப் பொறுத்தவரை தமிழ்நாடும், புதுவையும் தான் கடைமடை மாநிலங்கள் ஆகும். தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் நீரைப் பொறுத்தவரை, அதற்குரிய பங்கை எடுத்துக் கொண்டு புதுவை மாநிலத்திற்கு 7 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே கட்டுப்பாடு ஆகும். அதைத் தவிர்த்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும், மத்திய அரசும் பல தருணங்களில் உறுதி செய்திருக்கின்றன. இந்த உண்மையை மறைத்து விட்டு, ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கர்நாடகம் கூறுவதில் அரசியலைத் தவிர வேறொன்றுமில்லை.

முதற்கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுடன் 29.06.1998 அன்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் நடத்திய பேச்சுக்களில் அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டது. அதனடிப்படையில், முதற்கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு மத்திய நீர்வளத்துறை துணை ஆணையர் சக்கரவர்த்தி 21.09.1998 அன்று அனுப்பியக் கடிதத்தில், இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் தண்ணீரில் 6 டிஎம்சி ( நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி) நீர் புதுவைக்கு வழங்கப்பட வேண்டும், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 205 டிஎம்சி நீரில், மேட்டூர் அணைக்கு வருவதற்கு முன்பே ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக 1.40 டிஎம்சி நீர் எடுக்கப்படுவதால், அணைக்கு வரும் தண்ணீருடன் 1.40 டிஎம்சி நீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்., ஒகனேக்கல் குடிநீர் திட்டத்திற்காக எடுக்கப்படும் தண்ணீர் காவிரி நடுவர் மன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பு அல்லது இனி வழங்கப்படவுள்ள இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்படும் நீரின் அளவில் அடங்கியதாகும் என்பவை தான் ஒகனேக்கல் திட்டத்திற்கு மத்திய அரசு விதித்த நிபந்தனைகள் ஆகும்.

இதை பின்னாளில் கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்டு ஒகனேக்கல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்தது. அதன்பின் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிலும், 2018ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பிலும் இந்த நிபந்தனைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கும் இந்த நிபந்தனைகள் பொருந்தும். இரண்டாம் கட்ட ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமும் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்

தண்ணீரைக் கொண்டு தான் செயல்படுத்தப்படவுள்ளது. இன்னும் கேட்டால் நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான தண்ணீர் மேட்டூர் அணையில் அளவிடப் பட்டது. ஆனால், இப்போது பிலிகுண்டுலுவில் அளவிடப்பட்டு, அதன் பிறகு தான் ஒகேனக்கலுக்கு வருகிறது; அதன்படி ஒகனேக்கலுக்கு வரும் காவிரி நீரில் புதுவைக்கான 7 டிஎம்சி தவிர மீதமுள்ள நீர் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தமானது. அதைக் கொண்டு இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் போது அதில் தலையிட கர்நாடகத்திற்கு எந்த உரிமையும் கிடையாது.

அதனால், இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எந்த முட்டுக்கட்டையும் போடாமல் விலகியிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் கர்நாடகத்தின் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இரண்டாம் கட்ட ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x