Published : 22 Jan 2022 11:28 AM
Last Updated : 22 Jan 2022 11:28 AM
சென்னை: "தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவர்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிறப்பு மற்றும் மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், "இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் 50 ஆயிரம் முகாம்கள் தொடர்ந்து 18 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் பயண்படுத்தி தகுதியுள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். மேலும், இந்த முகாமில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவர்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் அலையில் இருந்து தப்ப இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது நல்லது. மேலும், ஐஐடி நிருவாகம் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கரோனாவை கண்டறியும் வகையில் நடமாடும் பரிசோதனை வாகனத்தை உருவாக்கி அரசுக்கு அர்ப்பணித்துள்ளனர்" என்றார் மா.சுப்பிரமணியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT