Published : 22 Jan 2022 07:43 AM
Last Updated : 22 Jan 2022 07:43 AM
கோவை: சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீலம்பூரில் இருந்து மதுக்கரை வரையிலான இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மேற்கு மண்டலத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு சென்று வர ஈரோடு -கோவை - பாலக்காடு வழித்தடம்முக்கியமானதாகும். சேலத்தில்தொடங்கி, ஈரோடு - கோவை -பாலக்காடு - திருச்சூர் வழியாக கொச்சியில் முடியும் தேசிய நெடுஞ்சாலை (எண் 544) வழித்தடத்தில் தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள், பொது மற்றும் தனிப்போக்குவரத்து வாகனங்கள் செல்கின்றன.
இச்சாலையில், திருப்பூரின் செங்கப்பள்ளி முதல் கோவை வழியாக வாளையார் வரையுள்ள சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் 53.8 கிலோ மீட்டர் தூரம் மட்டும் கடந்த 2010-ல் ரூ.850 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட்டது. நீலம்பூர் முதல் மதுக்கரை வரையிலான 26.2 கிலோ மீட்டர் தூர புறவழிச்சாலை அகலப்படுத்தப்படவில்லை.
இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகையில், ‘‘நீலம்பூர்-மதுக்கரை சாலையை, 4 வழித்தடமாக அகலப்படுத்த வேண்டும். குறுகிய சாலையாக இருப்பதால், மேற்கண்ட 26 கிலோ மீட்டர்தூரத்தில் ஒரே நேரத்தில் அதிக வாகனங்கள் செல்ல முடியாதது,
அடிக்கடி விபத்துகள் ஏற்படுதல், சரக்குகளை குறித்த நேரத்துக்கு எடுத்துச் செல்ல முடியாதது போன்ற இடையூறுகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்கவும், விபத்துகளற்ற, சீரான வாகனப் போக்குவரத்துக்கும் நீலம்பூர்-மதுக்கரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாவிட்டாலும், கோவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தமிழகமுதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் நீலம்பூர்-மதுக்கரைவரையிலான சாலையை விரிவுபடுத்த தேவையான மாநில அரசின்ஒத்துழைப்பு நிச்சயம் அளிக்கவேண்டும். மத்திய அரசு தாமதமின்றி சாலை விரிவாகத்தை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.
இச்சூழலில், நெடுநாள் கோரிக்கையான நீலம்பூர்-மதுக்கரை புறவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தொழில்நுட்ப, பொருளாதார, நிதிஅளவு குறித்த விரிவான திட்டஅறிக்கையை தயாரிக்க ஆலோசனை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறையின் அறிவிப்பில், ‘‘தமிழகத்தில் தேசியநெடுஞ்சாலை எண்: 544-ல் (பழையஎண்:47) கோவை புறவழிச்சாலையில் 141-வது கிலோ மீட்டரில் இருந்து 171.2 வது கிலோ மீட்டர் வரை இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 17-ம்தேதி இறுதி நாளாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கன்ஸ்யூமர் காஸ் அமைப்பின் செயலாளர் கே.கதிர்மதியோன் கூறும்போது, ‘‘இந்த26.2 கிலோ மீட்டர் தூர சாலையில்சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமையானது தனியார் கட்டுமான நிறுவனம்வசம் உள்ளது. சாலையின் இருபுறங்களிலும் விரிவாக்கம் செய்யத் தேவையான அரசு நிலங்கள் உள்ளன.சாலையை விரிவாக்கம் செய்து ஒப்பந்த காலம் முடியும் வரை தனியார் நிறுவன பராமரிப்பில் விட்டுவிட்டு பிறகு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கையகப்படுத்தவும் வாய்ப்புள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT