Last Updated : 22 Jan, 2022 11:12 AM

 

Published : 22 Jan 2022 11:12 AM
Last Updated : 22 Jan 2022 11:12 AM

தொடர் மழையால் கிருஷ்ணகிரி பகுதியில் முள்ளங்கி வளர்ச்சி பாதிப்பு

கிருஷ்ணகிரி அணையின் பின்புறம், தின்னகழனி கிராமத்தில் முள்ளங்கியை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் முள்ளங்கி வளர்ச்சி குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4735 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.

45 நாட்களில் முள்ளங்கி விளைச் சலுக்கு வருகிறது. ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விளையும் முள்ளங்கிகள், பெங்களூரு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியில் விளையும் முள்ளங்கிகள், உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளில் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

குறைந்த நாளில் ஓரளவுக்கு வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடி மேற்கொள் கின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு பின்புறம் தின்னகழனி கிராமத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிகழாண்டில், முள்ளங்கி விளைச்சல் அதிகரித்து, ஓரளவுக்கு விலை இருந்தாலும், தொடர்ந்து பெய்த மழையால் முள்ளங்கி வளர்ச்சி குறைந்து விளைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர் செய்தோம். இதற்காக நடவு, பராமரிப்பு உட்பட ரூ.35 ஆயிரம் வரை செலவானது. தற்போது 45 நாட்களில் சுமார் 15 டன் முள்ளங்கி அறுவடைக்கு வந்துள்ளது. முள்ளங்கி வளர்ச்சி குறைந்துள்ளதால் விலையும் குறைந்துள்ளது. தற்போது கிலோ ரூ.8 வரை கொள்முதல் செய்கின்றனர்.

போக்குவரத்து செலவு உட்பட வெளி சந்தையில் ரூ.20-க்கு விற்பனையாகிறது. வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், கூலி ஆட்கள் மூலம் முள்ளங்கி அறுவடை செய்து, தூய்மைப்படுத்தி, 40 கிலோ எடை கொண்ட மூட்டையாகக் கட்டி வாகனங்கள் மூலம் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு அவா்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x