Published : 08 Apr 2016 01:27 PM
Last Updated : 08 Apr 2016 01:27 PM
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய திருநெல்வேலி காவல்துறை சரகத்தில் ரவுடிகள் வேட்டை தொடங்கியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை அமைதியாக நடத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கையில் போலீஸார் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
விவரங்கள் சேகரிப்பு
திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. ஆர். தினகரன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் குற்றச்செயல் களில் ஈடுபட்டவர்கள், ரவுடிகள், அவர்கள் ஈடுபட்ட குற்ற நிகழ்வுகள் குறித்த அனைத்து புள்ளிவிவரங்களும் ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் கடும் குற்றங்களில் ஈடுபடும் 3 ரவுடி குழுக்களும், 5 ரவுடிகளும் இருக்கிறார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களுக்கும் இவர்கள் சென்று குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ரவுடி குழுக்களும், 2 ரவுடிகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ரவுடி குழுக்களும் இருக்கின்றன.
இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த 3 மாவட்டங்களில் உள்ள ரவுடி குழுக்கள் மீது 72 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன, வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளதா அல்லது வழக்கு விசாரணையில் இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தண்டனை கிடைக்கப்பெறாத ரவுடிகளுக்கு தண்டனை கிடைக்க செய்யும் நடவடிக்கையில் துரிதம் காட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரவுடிகளின் செயல்பாடுகள், அவர் களுக்கு உதவிகள் கிடைக்கும் வழிகள் குறித்தெல்லாம் ஆராயப் பட்டிருக்கிறது.
66 பேர் மீது குண்டாஸ்
இதுபோல் இந்த ரவுடி குழுக்களின் அங்கமாகவும், அந்தந்த பகுதிகளில் ஏரியா கமாண்டர் போலவும் செயல்படும் ரவுடிகள் பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத் தில் 19, தூத்துக்குடி மாவட்டத்தில் 47, கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 என்று கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 வழக்குகள் ரவுடிகள் மீது பதிவாகியிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியேவந்தவர்கள். கடந்த சில மாதங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 46 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 பேரும் என்று மொத்தம் 66 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முன்னேற்பாடு
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகள், வழக்குகளில் உள்ள முன்னேற்றங்கள் குறித்தெல்லாம் டி.எஸ்.பிக்களிடம் வாரத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலை 11 மணிக்கு கருத்துகள் கேட்டறியப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின்படி அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
சட்டப்பேரவை தேர்தலுக் காக திருநெல்வேலி சரகத்தில் ரவுடிகளை பிடிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. தேர்தலை அமைதியாக நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் காவல்துறை மேற்கொண்டிருக் கிறது என்று டிஐஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT