Published : 08 Apr 2016 12:49 PM
Last Updated : 08 Apr 2016 12:49 PM
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சோழவந்தான், நிலக்கோட்டை இடம் பெறாததால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, திருமங்கலம் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதி மட்டும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் பெரிதும் எதிர்பார்த்த சோழவந்தான், நிலக்கோட்டை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. இந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பலமுறை வெற்றிபெற்றுள்ளனர். குறிப்பாக நிலக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சியின் பாராம்பரிய தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.எஸ்.பொன்னம்மாள் மட்டுமே 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒரு முறை அவர் சுயேச்சையாக நின்று வென்றுள்ளார். அந்தளவுக்கு இந்த தொகுதியின் கிராமங்களில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
இந்த தொகுதியில் போட்டியிட ஏ.எஸ்.பொன்னம்மாள் பேத்தியும், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவருமான ஜான்சிராணி முயன்று வந்தார்.
இதற்காக, அவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக துணைப் பொதுச் செயலர் ஐ.பெரியசாமி ஆகியோர் மூலம் பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தார். நிலக்கோட்டை கிடைக்காவிட்டால், சோழவந்தான் தொகுதியில் போட்டி யிடவும் அவர் முயன்றார். ஆனால், இந்த இரு தொகுதிகளும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படாததால் ஜான்சிராணியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
வேடசந்தூர் தொகுதியை இளங்கோவன் தனது ஆதரவாளர் ஒருவருக்கு கேட்டு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால், அவருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறப் படுகிறது.
மறுத்த காங்கிரஸ் தலைவர்கள்
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியது: காங்கிரஸ் பாரம்பரியமாக போட்டியிட்டுவந்த நிலக்கோட்டை, சோழவந்தான் தொகுதிகளை ஒதுக்க திமுக மேலிடம் முன்வந்துள்ளது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை பெறுவதற்காக வெற்றி பெறும் வாய்ப்புள்ள இந்த தொகுதிகளைக் கைவிட்டு மற்ற தொகுதிகளை கேட்டுப்பெற்றனர். தலைவர்களின் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளால் பெறப்படும் தொகுதிகளால், ஒவ்வொரு தேர்தலிலும் செல்வாக்குள்ள தொகுதிகள் ஒவ்வொன்றாக காங்கிரஸ் இழக்கிறது என்றனர்.
இதற்கிடையில் நிலக்கோட்டை, சோழவந்தான் தொகுதிகளை விட்டுக்கொடுக்க திமுக முன்வரவில்லை என மற்றொரு தரப்பினர் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT