Published : 21 Jan 2022 05:00 PM
Last Updated : 21 Jan 2022 05:00 PM

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கரோனா உறுதி; உதகை நீதிமன்றத்தில் 38 பேருக்கு தொற்று

உதகை : வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டம் இளித்தொரை கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலம் என்பதால் இங்கு வருபவர்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்று வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கான பார்வை நேரம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை எனக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தற்போது 250-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் சற்று குறைந்து 242 ஆக பதிவாகி இருந்தது. 1,674 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில், பல ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நீதித்துறை அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளி வந்த நிலையில், உதகை நீதிமன்றத்தில் 38 பேருக்கும், குன்னூர் நீதிமன்றத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதியானது. இதில், உதகை சார்பு நீதிபதி மற்றும் குன்னூர் மாஜிஸ்டிரேட் ஆகியோருக்கு கரோனா உறுதியானது.

அதனையடுத்து 10 நீதிமன்றங்கள் இன்று காலை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன. இதனையடுத்து காலை பணிக்கு வந்த அனைத்து ஊழியர்களும் திரும்பிச் சென்றனர். இதனிடையே கூடலூர், பந்தலூர் நீதிமன்ற ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகு அங்குள்ள நீதிமன்றங்களும் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால், நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, நகராட்சி ஊழியர்கள் நீதிமன்றங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.

இதனிடையே, வனத்துறை அமைச்சர் ராமசந்திரனுக்கு தொற்று உறுதியானதால் அவர், இளித்தொரை கிராமத்தில் உள்ள தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இவர் கடந்த பொங்கல் விடுமுறையில் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார். மேலும், கடந்த 10-ம் தேதி பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் மதுசூதனனுக்கும் தொற்று உறுதியானதால், அவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x