Published : 21 Jan 2022 02:55 PM
Last Updated : 21 Jan 2022 02:55 PM
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் மிகுந்த அக்கறையோடு இந்து அறநிலையத்துறை செயல்பாடுகள் அமைந்துள்ளதாக இந்து அறநிலையத்துறை ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகிசிவம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இதில் புதியதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுடனான கூட்டம் இன்று நடைபெற்றது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுளளதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு முதல்வரைப் பாராட்டினர்.
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்: நம்முடைய அறநிலையத் துறை எப்போதுமே நம்முடைய பாராட்டுதலுக்குரிய முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ், செவ்வனே செயல்பட்டு வருகிறது. அதற்கு ஆன்மீக உள்ளங்களின் சார்பாக நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். துறையின் வெளிப்படைத் தன்மை, திருக்கோயில்களின் நிருவாகத்தை வெளிப்படைத் தன்மைக்கு உட்படுத்தியிருப்பது, பல நல்ல திட்டங்களை, பக்தர்களுக்கு மேம்படுத்தக்கூடிய வசதிகளை உருவாக்கியிருப்பது இவையெல்லாம் வரவேற்பிற்குரியது.
சுகி சிவம்: நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வருடைய நேர் பார்வையில் அறநிலையத் துறை சீரமைக்கப்படுவது ஒரு பெரிய வெற்றி என்று சொல்ல வேண்டும். காரணம், அந்தந்த அமைச்சரிடத்தில் விட்டுவிட்டு, முதலமைச்சர்கள் இதை முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தத் துறையினால், எந்தக் கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் அவர்கள் மிகுந்த அக்கறையோடு இதை நேரடியாக பார்ப்பதற்கு இந்தக் குழுவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேச மங்கையர்க்கரசி: அனைவருக்கும் வணக்கம். அறநிலையத் துறையின் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் நேரடியாக அறநிலையத் துறைக்கு வருகை தந்து இந்தக் குழுவை எவ்வாறு நடத்திச் செல்லலாம் என்ற அதற்கான சிறப்பான திட்டங்களை தீட்டுவதற்காக இங்கே வந்து நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்கின்ற நோக்கத்தோடு அமர்ந்திருக்கக்கூடிய தமிழக முதல்வர் நிறைகளையும் மட்டும் காதில் கேட்டுக் கொள்ளாமல், குறைகளையும் கேட்டு, அந்த குறைகளைக் களையக்கூடிய ஒரு ஆட்சியின் கீழ் வரக்கூடிய மக்கள் மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு வாழ்க்கையாக அமையும் என்பதற்கேற்ப நிறைய குறைகளை இந்து சமய அறநிலையத் துறை தற்போது நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறது. எனினும் அதை தெளிவுப்படுத்தும் வகையில் இந்தக் குழு அதற்கு வேண்டிய கருத்துக்களைத் தரும் என்று எங்கள் குழுவின் சார்பாக நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். கோயில் என்றாலே ஆன்மீகம், பக்தி. கோயிலில் சாமி கும்பிடுவது மட்டுமின்றி, கோயில் என்பது பல்வேறு தரப்பட்ட மக்களினுடைய வளர்ச்சிக்கு வித்திடக்கூடியது. கலைகளின் வளர்ச்சியிடமாக அமையக்கூடியது கோவில் தான். இந்தக் கூட்டத்தை முதன் முதலாக ஏற்பாடு செய்து இந்த குழு உறுப்பினராக என்னை நியமித்ததற்கு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT