Published : 21 Jan 2022 07:01 AM
Last Updated : 21 Jan 2022 07:01 AM
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பதவியை எஸ்சி மகளிருக்கு ஒதுக்கியதால் எதிர்க்கட்சிகள் விக்கித்துப் போயுள்ளன. இந்த அறிவிப்பால் பலரின் மேயர் கனவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தகர்த்தெறிந்து விட்டதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றின் பதவி காலம் கடந்த 2016-ம்ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற வழக்கு காரணமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் இறுதிகட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன்மாநில தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. அதில் பங்கேற்ற கட்சிகளில் பெரும்பான்மையானவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை, துணை ராணுவப்படை பாதுகாப்புடன் ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்டஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன், மாநில தேர்தல் ஆணையர்வெ.பழனிகுமார் ஆலோசனை நடத்தியுள்ளார். ஓரிரு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள 21மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளை மகளிருக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் பட்ஜெட் போடும், மாநில தலைநகரம் சென்னை மாநகராட்சி, எஸ்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை எதிர்க்கட்சிகள் மத்தியில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.
எஸ்சி மகளிருக்கு ஒதுக்கி இருப்பதால் எதிர்க்கவும் முடியாமல் விக்கித்துப் போயுள்ளனர். இதனால் வேறு வழியின்றி பாராட்டும் நிலைக்கு வந்துவிட்டனர். மேலும் மேயர்வேட்பாளராக நிறுத்த அதிமுக, பாஜக.வில் வலுவான எஸ்சி மகளிர் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பது திமுகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்துஉள்ளாட்சிகளிலும் வெற்றி வாகை சூடிவிடலாம் என்று திமுகவினர் நம்புகின்றனர். அதேநேரம், எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். அதன் எதிரொலியாகவே சென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுகவின் சைதை துரைசாமி வலுவாக இருந்தார்.அதனால் அரசியல் பின்புலம் மிகுந்த ஸ்டாலினை எதிர்த்து, கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் சைதை துரைசாமி நிறுத்தப்பட்டார். அவர் தோல்வி அடைந்ததும், அவருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பதவி தேடி வந்தது.
அதேபோன்று 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து, சைதாப்பேட்டையில் வலுவாக இருந்த ஆதிராஜாராம், அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டார். அவரும் தோற்ற நிலையில் அவருக்கு மாநகராட்சி மேயர் பதவிக்கு நிறுத்தலாம் என அதிமுகதலைமை முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் எம்பி பாலகங்கா, மேயர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற ஒரு கருத்தும் அதிமுகவில் நிலவியது.
இது ஒருபுறம் இருக்க, மத்திய அரசு செல்வாக்கைப் பயன்படுத்தி அதிமுக உதவியுடன் பாஜகவுக்கு மேயர் பதவியை பெற்று,கராத்தே தியாகராஜனை மேயர் வேட்பாளராக அறிவிக்கலாம் என பாஜக திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான் அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளின் மேயர் கனவை தகர்த்தெறியும் வகையில், சென்னை மாநகராட்சி மேயர் பதவி எஸ்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்ட அறிவிப்பு இருந்ததாக திமுகவினர் கூறுகின்றனர்.
அரசின் இந்த அறிவிப்பு குறித்து அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டபோது, ‘வரவேற்கிறேன்' என்று தனது பதிலைசுருக்கமாக முடித்துக்கொண்டார். பாஜகமாநில பொதுச்செயலர் கரு.நாகராஜனிடம் கேட்டபோது, ‘‘அரசின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அதேபோல்,திமுகவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தான் முதல்வராக்குவோம் என இல்லாமல், எஸ்சியைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கினால் மேலும் மகிழ்ச்சி அடைவேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT